தமிழகத்தில் அமலுக்கு வந்த 14 நாள் முழு ஊரடங்கு காரணமாக கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளால், பேருந்துகள் மற்றும் வாடகை கார்கள் ஓடாத நிலையில், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகத்தில் வேகம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக? இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, இன்று காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்து உள்ளது.
முழு ஊரடங்கின்போது பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதன் படி,
- மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்கான தடை தொடர்கிறது.
- தனித்து இயங்கும் மளிகை, பலசரக்கு, காய்கறி, பூ விற்பனை, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
- மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் எப்போதும் போல தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
- நியாய விலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை அல்லது ஆவணங்களுடன் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
- சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று அதிரடியாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்படும் என்பதால், அதன் ஊழியர்கள் அலுவலகம் சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
- பேருந்துகள், வாடகை கார்கள் இயக்க அனுமதி இல்லை.
- முழு ஊரடங்கில் மருத்துவம், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- இரயில் மற்றும் விமான நிலையங்களுக்குப் பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.
- வேளாண் உற்பத்திக்குத் தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
- தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை.
- உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
- ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
- மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.
- கோயில்களில் குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.
- நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.
- நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் மற்றும் குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.
- மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப்படுகிறது.
- குறிப்பாக, போலீசாரின் வாகன சோதனையின் போது, அடையாள அட்டையைக் காண்பித்து பத்திரிகையாளர்கள் தங்கு தடையின்றி செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றாதோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், சென்னையில் 10 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.