2021 - ல் தான் கொரோனா தடுப்பூசி! - திட்டவட்டமாக கூறிய WHO
By Nivetha | Galatta | Jul 23, 2020, 03:27 pm
கோவிட் - 19 கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டறியப்பட்டாலும், அது உலகம் முழுவதுமாக விநியோகப்படுவதற்கு சில காலம் எடுக்கும் என்று தொடர்ச்சியாக சொல்லி வந்தார்கள் அறிவியலாளர்கள். ஒருவேளை அந்த விநியோகத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டுவிட்டால் சிக்கல் என்பதால், ``முடிந்தவரை வேகமாக விநியோகிக்கும் வகையில், துரிதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்" எனக்கூறியது உலக சுகாதார நிறுவனம். மேலும், ``அப்படி எடுக்கும் காலம் வரை, கொரோனாவை கட்டுப்படுட்துவதற்கான நடவடிக்கைகளை உலக மக்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் அவர்கள்.
இதுபற்றி உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் ரேயான் கூறும்போது, ``கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஒரு சில சோதனைகள் மட்டுமே தாமதமான நிலையில் உள்ளன. எனினும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாடடை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இது மனிதர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது. இதேபோல் ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யாவும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சொல்லப்போனால், தடுப்பூசி விஷயத்தில் நாம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். பல தடுப்பூசிகள் இப்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ளன. பாதுகாப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில். இதுவரை எதுவும் தோல்வியுற்றதில்லை.
நியாயமான தடுப்பூசி விநியோகத்தை உறுதிப்படுத்த உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வருகிறது, ஆனால் அதைவிட முக்கியம், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது.
கொரோனா, சமூக பரவுதல் நிலையை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், உலகம் முழுக்க இருக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதில் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தில் நோயை முழுமையாகக் கட்டுப்படுத்திய பின்னர், பள்ளிகளைத் திறக்க வேண்டும்"
என்று கூறியுள்ளார்.
இப்போது பள்ளிகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பேச காரணம், அமெரிக்காவின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்புதான். பல்வேறு விவாதங்களுக்கு உட்பட்டு நடந்த இந்த விஷயத்தின் எதிரொலியாகத்தான் இது கூறப்பட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர்தான், உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் டெட்ராஸ் அதேநாம், ``ஊரடங்கு வைரஸ் பரவலைத் தடுக்குமே தவிர, அதை முழுவதுமாக அழிக்காது. எனவே, வைரஸ் பாசிட்டிவ் நபர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல் மிகவும் அவசியம். வைரஸ் எங்கு இருக்கிறது என்பதை முதலில் கண்டுப்பிடிக்காமல், எந்த நாடாலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் அனைத்து நாட்டிலும் தொடர்பு தடமறிதல் மிகவும் முக்கியமானது. இது தனிப்பட்ட கேஸ்கள் நிறைய கேஸ்களாக மாறுவதைத் தடுக்கும். மேலும், அதன் மூலம் சமூக பரவல் உருவாவதையும்கூட முன்னரே தடுக்கலாம்.
தொடர்பு தடமறிதலை முறையாகப் பின்பற்றினால் சமூக பரவலைக் கொண்டுள்ள நாடுகள் கூட தங்கள் தொற்றுகளை எளிமையாகக் கட்டுப்படுத்த முடியும். தற்போது அனைத்து நாடுகளிலும் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுவதால் அனைவரும் இதைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பெரியம்மை முதல் போலியோ, எபோலா, கோவிட் 19 வரை ஒரு வெடிப்பின் முக்கிய பகுதியாக இருப்பது தொடர்பு தடமறிதல்தான். எனவே, பாதிக்கப்பட்ட ஒருவரை தனிமைப்படுத்துவதோடு இல்லாமல், வைரஸ் பரவலின் தடம் நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி அனைத்து நாடுகளும் செய்தால் விரைவிலேயே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்று தெரிவித்திருந்தார்.
- ஜெ.நிவேதா