பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.. சீனாவில் “செக்ஸ்” கல்வித் திட்டம் அமல்!
பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால், சீனாவில் புதிய “செக்ஸ் கல்வித் திட்டம்” அமல்படுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந் தொற்று காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவிலான குற்றச் சம்பவங்கள் மற்றும் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.
இந்தியாவைப் போன்று, சீனாவிலும் பாலியல் பலாத்கார குற்றங்கள் தொடர்ந்து அதிரித்து வருவதால், இந்தாண்டு முதல் புதிதாக “பாலியல் கல்வித் திட்டம்” அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதாவது, சீனாவில் முறையான பாலியல் கல்வித் திட்டங்கள் இல்லாததால், கடந்த ஆண்டில் மட்டும் 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகின்றன.
முக்கியமாக, “பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களால் பெரும்பாலான குற்றங்கள் நடந்து உள்ளதாகவும்” சீனாவின் கலாச்சாரம் மற்றும் குழந்தைகளுக்கான அறக்கட்டளை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி தெரிய வந்துள்ளது.
அந்த புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே “பள்ளிகளில் மாணவர்களுக்கு பாலியல் கல்வித் திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஜூன் 1 ஆம் தேதி பாலியல் கல்வி தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால், இச்சட்டம் அமலுக்கு வருவதாக அந்நாட்டின் கல்வித் துறை அறிவித்து இருக்கிறது.
“இந்த சட்டத்தின் படி, மாணவ - மாணவியருக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தினால் மிக கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்று, சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், “பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதால், மழலையர் பள்ளிகள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் சிறப்பு கல்வி பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு பாடங்கள் நடத்தப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“இதற்காக ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான நடத்தை விதிகளை மேம்படுத்தவும், வீடியோ கண்காணிப்புக்கான விதி முறைகள் மற்றும் பாலியல் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், புகார் அளிப்பதற்கும் பள்ளிகள் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும்” கூறப்பட்டுள்ளது.
அத்துடன், “பள்ளி ஊழியர்கள் மற்ற பிற ஊழியர் அல்லது மாணவர்களுடன் காதல் அல்லது பாலியல் உறவுகளைக் கொள்ளக் கூடாது” என்றும், பள்ளியில் பணியாற்றும் அனைத்து தரப்பினருக்கும் அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
“பாலியல் ஆபாசப் பொருட்களை மாணவர்களிடம் காட்டக் கூடாது என்றும், இந்த விதி முறைகளை மீறும் பள்ளி ஆசிரியர்கள் அல்லது ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், அல்லது கல்வித் துறையில் பணியாற்றத் தடை விதிக்கப்படும்” என்றும், அந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக உளவியல் மற்றும் பாலியல் கல்வி ஆசிரியரான வென் சூய்கி பேசும் போது, “மாணவர்களுக்கான பாலியல் கல்வியின் தேவை அதிகரித்து வருவதாக” குறிப்பிட்டார்.
“மாணவர்கள், இளைஞர்கள் உடல் மற்றும் உளவியல் பாலியல் முதிர்ச்சியை அடைந்து வருகின்றனர் என்றும், இணையதளத்தில் வரும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதால், அவர்கள் பெரும்பாலும் தவறாக வழி நடத்தப்படுகின்றனர்” என்றும், கவலைத் தெரிவித்தார்.
முக்கியமாக, “பாலியல் என்பது மனித இயல்பு என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும், அதனைச் சரியான மற்றும் சட்ட ரீதியான வழியில் இயற்கையான முறையில் அனுபவிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.
“பாலியல் குற்றங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டால், எதிர் காலத்தில் அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தாது என்றும், உதாரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் உயிரியல் தன்மை குறித்து மாணவர்களிடம் கற்பித்தால் மட்டும் போதாது” என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“மாதவிடாய் குறித்து வெட்கப்படாமல் இருக்கவும், அவர்களின் பாலின சமத்துவ மதிப்புகளை வளர்க்கவும் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும், குறிப்பாக விந்தணுக்களும், முட்டைகளும் கருவுற்ற முட்டையாக இணைகின்றன என்று மாணவர்களுக்குக் கற்பித்தால் மட்டும் போதாது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “இதனால் ஏற்படும் உடலியல் மற்றும் உளவியல் மாறுபாடுகள் என்ன? என்பதையும் விளக்க வேண்டும் என்றும், உடலுறவு குறித்துச் சிந்திக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் என்றும், புதிய விதி முறைகளின் படி பாலியல் கல்வியைக் கற்பித்தால், சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையும்” என்றும், அவர் தெரிவித்தார்.
இதனிடையே, “ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது புகார் வந்தால், அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.