“தமிழக அரசின் பணிகளில் திருப்தியில்லை என்று கூறி உள்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள், மதுவிலக்கு சிறப்பு டிஜிபி மீது தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தமிழக அரசு அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் உடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கத்தை விட அதிகாரிகள் மீது தலைமைத் தேர்தல் ஆணையர் மிக கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதில், எடுத்ததுமே சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், “உங்கள் துறையில் ஏன் 12 ஆயிரம் காலியிடங்களை வைத்து இருக்கிறீர்கள்?” என்று, கேள்வியைக் கேட்டார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காமல் கடும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சற்று நிதானத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன், பதில் அளித்துப் பேசினார். அப்போது, “பணி நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது” என்று, குறிப்பிட்டார்.
மறுகணமே, “அது வேறு விவகாரம். நீங்கள் பிரச்சினையைத் திசை திருப்ப பார்க்க வேண்டாம். தேர்தல் நேரத்தில், இவ்வளவு காலிப்பணியிடங்களை வைத்திருக்கலாமா?” என்றும், தனது கடுமையாக குற்றம்சாட்டை கேள்வியாக முன்வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, மது விலக்கு பிரச்சினைகள் இருக்கின்றன. நீங்கள் ஏன் அவற்றைச் சரியாகக் கவனிக்கவில்லை. கண்காணிக்கவும் இல்லை. உங்களுக்கு வேலை செய்யத் தெரியவில்லை” என்று, விமர்சனம் செய்தார்.
அத்துடன், “நீங்கள் எதற்கும் பயன் இல்லாத அதிகாரி. சட்டம் ஒழுங்கும் மிக மோசமாக உள்ளது. அதை எல்லாம் நீங்கள் கண்காணிக்கவில்லை. தமிழக போலீசில், தகுதி உள்ள அதிகாரிகளுக்கு ஏன் பதவி உயர்வு வழங்கவில்லை. தேர்தல் நெருங்குகிறது. இனி ஒரு வாரத்தில் அவர்களுக்கெல்லாம் பதவி உயர்வு உங்களால் கொடுக்க முடியுமா?” என்றும், கேள்வி எழுப்பினார்.
மேலும், “தேவையில்லாமல் காவல் துறை உயர் அதிகாரிகள் மட்டத்திலான பதவியை காலியாக ஏன் வைத்துள்ளீர்கள்?” என்று, அடுக்கடுக்கான கேள்விகளைச் சரமாரியாகக் கேட்டு, வெறும் கேள்விகளையே கேட்டு, அவர் உண்டு இல்லை என்று ஆக்கவிட்டார்.
அதேபோல், தமிழக டிஜிபி திரிபாதியைப் பார்த்துப் பேசிய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது” என்று, விமர்சித்தார்.
“இங்கு, ரவுடிகள் சுதந்திரமாகச் சுற்றுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.
“அத்தகைய ரவுடிகள் மீது ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும், எனக்கு சட்டம் ஒழுங்கு பணியில் திருப்தியில்லை” என்றும் மிக கடுமையாக, தனது விமர்சனத்தை அவர் முன் வைத்தார். ஆனால், இது தொடர்பாக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியிடம் ஒரு கேள்வியும் அவர் கேட்கவில்லை.
அதன் தொடர்ச்சியாக, மது விலக்கு சிறப்பு டிஜிபி ஷகீல் அக்தரைப் பார்த்து பேசிய சுனில் அரோரா, “தமிழகத்தில் கள்ளச் சாராயம் அதிகமாக விற்பனையாகிறது. அது தொடர்பாக சரியாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்ற கேள்வியை முன் வைத்தார்.
“போலி மது விற்பனை செய்யும் பெரிய விஐபிக்களை கைது செய்யவில்லை என்றும், எளியவர்களைத் தான் நீங்கள் கைது செய்துள்ளீர்கள் என்றும், உங்களிடம் தெளிவான விளக்கம் எதுவும் இல்லை” என்றும், அவர் குற்றம்சாட்டினார்.
“தேர்தல் நேரத்தில் அதிக அளவில் மதுவைப் பலர் வாங்கி பதுக்கி வைத்து உள்ளனர் என்றும், தேர்தல் நேரத்தில் அவற்றைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது என்றும், இது குறித்து நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?” என்றும், அவர் சரமாரியான கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தார்.
தொடர்ந்து பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, “நான் சொன்ன இந்த அனைத்து குற்றச்சாட்டுகளும் மிக தீவிரமானவை என்றும், தமிழக அரசு நிர்வாக செயல்பாடு எனக்குத் துளியும் திருப்தியாக இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, “நான் சொன்ன இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நாளை காலை 11 மணிக்குள் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி, எனக்கு அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும்” என்றும், அறிவுறுத்தினார்.
முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்தியப் பிரதா சாகு, சில அறிக்கைகளை வழங்கினார். அதன் அடிப்படையில் தான் தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, இப்படியாக சக உயர் அதிகரிடம் பேசினார் என்றும், கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக உயர் அதிகாரிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையர் இப்படி நேரடியாகக் கேள்விகளைக் கேட்டது, அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பையும், சக அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.