“பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் தேவை” என்று, மனைவியை இழந்து தனிமையில் தவிக்கும் முதியவர் ஒருவர் விளம்பரம் செய்து வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
நம்மை சூழ்ந்து ஆயிரம் ஆயிரம் உறவுகள் இருந்தாலும், விரும்பிய உறவை நம்பி ஏமாந்த அல்ல இழந்த மனதுக்குத் தீர்வு என்பது தனிமை மட்டும் தான் மருந்து. ஆனால், அதே நேரத்தில், தனிமை வலியாவதும் வரமாவதும் நாம் கடந்து வந்த பாதையில் நம்மைக் கடந்து சென்ற நினைவுகள் மட்டுமே தீர்மானிக்கின்றன.

இங்கிலாந்து நாட்டில் gloucestershire பகுதியில் வசித்து வரும் சுமார் 75 வயதான டோனி வில்லியம்ஸ், தன் மனைவி உடன் வசித்து வந்தார். அவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது. இதனால், இத்தனை ஆண்டுகளாகமாக கணவன் - மனைவி மட்டுமே தனிமையில் வசித்து வந்தனர். அந்த பகுதியில், குடும்பங்கள் மற்றும் வீடுகள் எதுவும் இன்றி, டோனி வில்லியம்ஸ் வீடு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படியாக, இந்த பகுதியில் டோனி வில்லியம்ஸ் தம்பதியினர் மட்டும் நீண்ட காலமாகத் தனிமையில் வசித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் டோனி வில்லியம்ஸின் மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார். இதனையடுத்து, மனைவி இறந்தது முதல் டோனி வில்லியம்ஸ், யாருடனும் பேசாமல் இருந்து வந்து உள்ளார்.

இதனால், டோனி வில்லியம்ஸ் தனிமையில் கடுமையாக அவதியுற்று வந்தார். இதனால் சற்று மாற்றி யோசித்த டோனி வில்லியம்ஸ், “பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் தேவை” என்று, அங்குள்ள ஒரு உள்ளூர் பத்திரிகையில் 2 முறை விளம்பரம் செய்துள்ளார். ஆனால், அந்த விளம்பரம் மூலம் எந்த பலனும் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தனது முகவரி பதிவு செய்யப்பட்ட அட்டை ஒன்றைத் தயாரித்து, அதனை வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் அங்குள்ள உள்ள பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்.

மேலும், “என்னுடன் ஒன்றாக அமர்ந்து இசையை ரசிக்கவும், தோட்டத்தில் அமர்ந்து கதைகள் பேசவும் நண்பர்கள் தேவை” என்று, ஒரு கோரிக்கையோடு ஒரு பதாகையைத் தனது வீட்டு ஜன்னலில் வைத்து மேலும் விளம்பரம் செய்து வருகிறார். 

அது தொடர்பாகப் பேசிய அவர், “இதுவே எனது புதிய நண்பர்களைத் தேடுவதற்கான கடைசி முயற்சி” என்றும், அவர் தெரிவித்து உள்ளார். அத்துடன், “என் வீட்டின் குடியிருப்பு வழியே யாரும் அதிகம் கடந்து போவதில்லை என்றும், ஆனாலும் யாரேனும் நிச்சயம் எனக்குக் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும், டோனி வில்லியம்ஸ் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே மனைவியை இழந்து யாரும் ஆதரவு இல்லாமல் தனிமையில் தவிக்கும் முதியவர் ஒருவர், “பேச்சுத் துணைக்கு ஒரு நண்பர் தேவை” என்று,  விளம்பரம் செய்து வருவது, இணையத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு, தற்போது வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.