அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இரண்டு மாத காலத்துக்கும் குறைவான நாட்களே இருப்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இரண்டு பிரதான கட்சிகளும் மாறிமாறி ஒருவர் மேல் ஒருவர் குற்றச்சாட்டை வைத்த வண்ணம் உள்ளனர். 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் அரசின் நிர்வாக செயல்பாடுகள் சரிவர இல்லையென, மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தேர்தலிலும் எதிரொலிக்கும் என பரவலாகப் பேசப்பட்டு வருகிறது
 
இந்நிலையில் ட்ரம்ப் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்ய இருக்கிறார் என்ற செய்தி வெளியானது. தடுப்பூசி அறிமுகத்தின் மூலம், மக்களின் விசுவாசத்தை பெற ட்ரம்ப் முயல்வதாக கூறப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, எதிர்கட்சிகள் அவர் மீது காட்டமாக விமர்சனத்தை வைக்க ஆரம்பித்தனர். அந்தவகையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ட்ரம்ப் கூறும் தகவல்களை நம்ப முடியாது என்று கூறியிருந்தார். மேலும் கமலா ஹாரிஸ் கூறுகையில், ``அமெரிக்க நீதி துறையில் நிறவெறி இருக்கிறது. அமெரிக்காவில் தற்போது நாம் பார்க்கும் யதார்த்தம் பல தலைமுறைகள் கடந்து நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க நீதி துறையில் கருப்பின மக்களுக்கு ஒரு சட்டம், வெள்ளையின மக்களுக்கு ஒரு சட்டம் என இருவேறு சட்டங்கள் உள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று அவர் தெரிவித்தார். ஞாயிறன்று கமலா ஹாரிஸ் சிஎன்என் சேனலுக்கு கூறும்போது, கொரோனா தடுப்பூசியின் திறன் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கும் வரை அதிபர் ட்ரம்ப் சொல்வதை தான் நம்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார், இதுதான் ட்ரம்பின் ஆத்திரத்துக்குக் காரணம்.

கமலா ஹாரிஸின் தொடர் விமர்சனத்துக்குப் பிறகு, தற்போது அதிபர் ட்ரம்ப் அந்தக் கருத்துகளுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

அதில் அவர், "கொரோனா தடுப்பு மருந்து குறித்து கமலா ஹாரிஸ் தவறான முறையில் பேசி வருகிறார். அதன் மூலம் இது பெரிய சாதனையில்லை என மக்களை நினைக்க வைக்க அவர் முயற்சிக்கிறார். தனி நபராக எந்த புகழாரமும் எனக்கு தேவையில்லை. மக்கள் இந்நோயில் இருந்து குணமடைய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள். ஒருவேளை அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த நாடு (அமெரிக்கா) சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் அவர்களின் சொந்த நாடு போல நடத்தப்படும். அவர்களின் கட்டுப்பாட்டுக்கள் அமெரிக்கா இருக்கும். பைடனின் வெற்றி, சீனாவுக்கான வெற்றி. கொரோனா தடுப்பூசி குறித்து ஜோ பைடன், கமலா ஹாரீஸ் ஆகியோர் வதந்தி பரப்புகின்றனர்.  ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும்

தடுப்பூசி கண்டறிவதென்பது, எனக்கான சாதனையல்ல. அது, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயிலிருந்து மீட்பதற்கான சாதனை. சிகிச்சையிலும் நாம் சம அளவில் நன்றாகவே திகழ்கிறோம். நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றப்படுத்துகிறது.

அதனால்தான் மக்கள் நலனுக்கு எதிராக, தடுப்பூசி குறித்து இழிவாகப் பேசியதற்கு பைடனும், ஹாரிஸும் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என நான் கேட்கிறேன்.

இவர்களின் இந்தப் பேச்சு, நாட்டுக்கு மட்டுமல்ல... உலகிற்கே நல்லதல்ல. ஆனால் அவர்கள் இப்படித்தான் பேசி வருகின்றனர். கமலா ஹாரிஸ் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதனால் தான் கூறுகிறேன் அவர் அதிபராக முடியாது.

மற்றபடி, அக்டோபரிலேயே கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மூலமாக உலகுக்கு கிடைத்து விட முடியும். பொய்களைத் தாண்டி இந்த தடுப்பூசி பாதுகாப்பானது திறன் மிக்கது என்பது உண்மை. விரைவில் அது வெளிவரும்"

 எனக் கூறினார்.