அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கைது வாரண்ட்! ஏன்? எதற்குத் தெரியுமா?
By Aruvi | Galatta | Jan 08, 2021, 12:19 pm
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவே நேற்று போர்க்களம் போல் காட்சி அளித்தது. அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி டிரம்பின் ஆதரவாளர்கள்
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய அந்நாட்டு போலீசார், போராட்டக்காரர்களைக் கலைந்து போகும்படி அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைய மறுத்ததோடு, போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். இதனால், போலீசார் துப்பாகிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், முதலில் பெண் ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இப்படியாக நடத்தப்பட்ட அந்த துப்பாக்கிச் சூட்டில் 4 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 100 கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமெரிக்காவே நேற்று போர்க்களம் போல் காட்சி அளித்ததாகவும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை நோக்கி முற்றுகையிட்டதால், வெள்ளை மாளிகை சுற்றிலும் அதிரடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய டிரம்ப், தான் பேசிய வீடியோக்களை டிவிட்டரில் பதிவேற்றம் செய்தார்.
இதனால், அவை சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. அமெரிக்க மக்கள் பலரும் இதனைப் பகிர்ந்தனர். இதன் காரணமாக, “வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, அந்த வீடியோக்களை டிவிட்டர் நிறுவனம் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழ்நிலையில் தான், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறக்கப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பாக்தாத்தில் ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி, துணைத் தளபதி அபு மெஹதி முஹென்திஸ் உள்ளிட்டவர்கள் அமெரிக்காவின் ஆள் இல்லா ராணுவ விமானம் மூலம் குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் வெடித்துச் சிதறியது. அத்துடன், விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் ராக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. இதனால், அந்த பகுதியில் தீ பற்றி எரிந்த நிலையில், கரும் புகைகளும் எழுந்தன.
இதனை அடுத்து, பாக்தாக் விமான நிலைய தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றது. அத்துடன், அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் படியே, இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
குறிப்பாக, “ஈராக் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டிருந்தார்கள்” என்றும், அமெரிக்கா அப்போது குற்றம்சாட்டியது.
அத்துடன், வெளிநாடுகளில் அமெரிக்கர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, ஈரான் நாட்டில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தன. அப்போது, ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒன்றினையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அப்படி ஒன்றினையும் பட்சத்தில், 3 ஆம் உலகப் போருக்கு அது வித்திடும் என்றே, உலக அரசியல் அறிஞர்களால் கடும் எச்சரிக்கையும் விடப்பட்டது.
முக்கியமாக, “இந்த விவகாரத்தில் பழிக்குப் பழி வாங்குவோம்” என்று முழங்கிய ஈரான் அரசு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை, பயங்கரவாதியாக அறிவித்தது.
அப்போது, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் ஈரான் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த விவரம் இது வரை வெளியிடப்படவில்லை.
அதன் தொடர்ச்சியாக, ஈரான் தளபதி சுலைமானி உள்ளிட்ட ராணுவத்தினரைக் கொலை செய்ததில் 40 அமெரிக்க அதிகாரிகளுக்குப் பங்கு உண்டு என்பதை ஈரான் ராணுவம் கண்டறிந்ததாகச் செய்திகள் வெளியானது. இதையடுத்து, ஈரான் நாட்டு நீதிமன்றம் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 40 பேரைக் கைது செய்ய வலியுறுத்தி ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பியது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஈரான் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக, டிரம்பிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக ஈரான் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்த வழக்கில், அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை விசாரிக்கும் பாக்தாத்தின் விசாரணை நீதிமன்றம் தான், இந்த கைது வாரண்ட் உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.
அமெரிக்காவில் தற்போது நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்து வரும் நிலையில், ஈரான் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு டிரம்புக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.