கடந்த 8-ம் தேதி, 33 வயதான ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா, தன்னுடைய 4 வயது மகனுடன் கலிபோர்னியாவில் உள்ள ஏரியில் வாடகைக்கு எடுத்த படகில் சென்ற போது காணாமல் போனார்.  படகு உரிமையாளர்கள், அவர்கள்  திரும்பி வரவில்லை என்பதால் தேடிச் சென்றபோது, நயாவின் மகன் லைப் ஜாக்கெட்டுடன் படகில் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீட்கப்பட்டான்.  இந்நிலையில்,  6 நாட்களுக்குப் பிறகு தற்போது நயா ரிவேராவின் உடல் ஏரியில் கிடைத்துள்ளது. 

க்ளீ என்ற திரைப்படத்தின் மூலம் அதிகப் புகழைப் பெற்ற நயா ரிவெரா, ஃப்ரான்கன்ஹூட், மேட் ஃபேமிலீஸ் உள்ளிட்ட 6 படங்களில் நடித்தவர் இவர். நடிகை நயா,  நடிகர் ரியான் டோர்சியை 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஜோஸி பிறந்தான்.பின், இவர்கள் 2018-ம் ஆண்டு பிரிந்தனர். இவர் கடந்த 8-ம் தேதி, கலிபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் மதிய நேரமாக ஒரு படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தனது 4 வயது மகன் ஜோஸியுடன் சவாரிக்குச் சென்றுள்ளார்.  மூன்று மணி நேரம் கழித்து மாலை 4 மணியளவில் சிறுவன் ஜோஸி மட்டும், லைஃப் ஜாக்கெட் அணிந்தபடி, தனியாகப் படகில் தூங்கிக் கொண்டிருந்தான். ஜோஸியை மீட்டுக் காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில், தன் தாய் நயா தண்ணீரில் நீந்தியதாகவும், அவரால் மீண்டும் படகுக்கு வரமுடியவில்லை என்றும் ஜோஸி கூறியுள்ளார். இதனால் பிரு ஏரியில் நயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஏரியின் வடக்குப் பகுதியில், சுமார் 30 அடி ஆழமுள்ள பகுதியில் படகு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸார் மறுநாள் கூறினார். பகலில் ஒரு அடிக்கும் குறைவான நீரின் தெளிவு நிலை, மேற்பரப்பின் கீழ் அடர்ந்த செடிகள் மற்றும் குப்பைகள் ஆகியவற்றால் தேடல் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நயா ரிவேராவின் சடலம், ஜூலை 13-ம் தேதி நேற்று கண்டுபிடித்ததாகவும் அது காணாமல் போன நடிகை தான் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இவரின் இறப்பைக் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வென்ச்சுரா கவுண்டி ஷெரிப் வில்லியம் அயூப், "ரிவேராவின் உடல் ஏரியின் வடகிழக்கு பகுதியில் உள்ள நீரின் மேற்பரப்புக்கு அருகில் காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ள நீரின் ஆழம் 35 முதல் 60 அடி வரை இருக்கும்" என்றார். கிடைத்துள்ள உடலில் லைஃப் ஜாக்கெட் இல்லையென்றும், உடைகள், அடையாளம் ஆகியவற்றின் அடிப்படையில் அது ரிவேராவின் உடல் என அடையாளம் கண்டதாகவும் ஷெரிப் அயூப் கூறினார். 
 
ஏரியில் நடிகை காணாமல் போனதிலிருந்து, கலிபோர்னியா மாகாணம் முழுவதும் உள்ள தேடல் குழுக்கள் ஹெலிகாப்டர்கள், படகுகள், ட்ரோன்கள், நாய்கள் மற்றும் டைவிங் கியர் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏரி முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நயா ரிவேராவின் தேடலில் 100 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நடிகையைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உதவிய அனைவருக்கும் திருமதி ரிவேராவின் குடும்பத்தினர் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். 

நயா ரிவேரா காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்பு, 'நாங்கள் இருவர் மட்டுமே' என்ற தலைப்பில் தனது மகனுடன் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

புகைப்படத்தைக் காண லிங்க்கை க்ளிக் செய்யவும் :  NayaRivera 

நயா ரிவேராவின் மரணத்தைத் தொடர்ந்து அவருக்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தன் மகனைக் காப்பாற்றிவிட்டு நயா இறந்தது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர். மகனைப் படகில் ஏற்றிய நயா ரிவேராவால் ஏன் ஏற முடியாமல் போனது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

- பெ.மதலை ஆரோன்