அதிமுகவிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்ததா காங்கிரஸ் கட்சி..? – நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிக்கை

அதிமுகவிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்ததா காங்கிரஸ் கட்சி..? – நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிக்கை - Daily news

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியிலும் ஏகத்துக்கும் பிரச்சனை நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. சத்தியமூர்த்தி பவனிலும் சத்தத்திற்கு பஞ்சமில்லை.

இவருக்கு சீட் கொடுக்கக்கூடாது, இவருக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் வேளையில்தான், காங்கிரஸ் கட்சி எம்.ஜி.ஆரின் மரணத்தில் அதிமுகவில் செய்த அரசியல் பற்றி சிவாஜி கணேசன் அவர்கள் எழுதிய அறிக்கை நமக்கு கிடைத்தது.

அந்த அறிக்கையில் அவர் எழுதியிருப்பதாவது, ”என் உயிரினும் மேலான தமிழக பெருமக்களே.... கண்ணிணிமினிய காங்கிரஸ் தொண்டர்களே.... சொந்தமுள்ளவன் கடிதமெழுதுவான், சொத்துள்ளவன் உயிலெழுதுவான். பந்தமுள்ளவன் தன் பரிவையும் பாசத்தையும் எப்படியெல்லாம் இருக்க நினைத்தோம், எப்படியிருக்கிறோமென்று இதயக் குமுறலையும், வெடித்துச் சிதறும் வேதனையையும், வலிகளாக்கி வார்த்தைகளால் விளக்க நினைப்பான். அப்படியொரு முடிவுக்கு கொண்டு விடப்பட்ட இந்த மனசாட்சியுள்ள மனிதனின் மனிதாபிமானக் குமுறல்தான் இங்கு நான் கூறுவது..


பெருந்தலைவர் காமராஜ் அவர்களால் கவரப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்ட காங்கிரஸை, பலப்படுத்த எனது படவுலக வாழ்வையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக பணியாற்ற என் தலைவர் பின்னால் புறப்பட்டேன். காங்கிரஸ் என்ற புனிதத்தை நேசித்தேன், சுவாசித்தேன். என் மன்றத்து பிள்ளைகள் அத்தனை பேருமே இனி என்னோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சிக்கே உடமை என உறுதியோடு ஓடோடி உழைத்தேன். தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் 'காங்கிரஸ்' மாளிகையின் அஸ்திவாரத்தை வலுப்படுத்த மேடையேறி, மக்கள் உள்ளத்தில் மாபெரும் எழுச்சி ஏற்பட கருவியானேன். இழந்ததை மீண்டும் பெறவும், இன்று எங்கள் இயக்கம் வலுவான எதிர்கட்சியாக வளர அன்று நாங்கள் எங்களையே தத்தம் செய்து கட்சிக்கு உரமானோம்.

காங்கிரசுக்கு ஏற்பட்ட சோதனை காலங்களில் மட்டும் எனக்கும் என் சக நண்பர்களுக்கும் பங்குண்டு. ஆனால் சுகம் வேண்டுமென்று கேட்டதில்லை. காமராஜர் மறைந்தார். அவர் கண்ட கனவுகளை நனவாக்க, அன்னையோடு இணைந்தோம். தாய்க்கு தமிழகப் பிள்ளைகள் தளராது உழைத்தோம். அன்னை இந்திராவுக்கு சோதனை வந்த போதெல்லாம் மன்றத்து பிள்ளைகள் சிறை சென்றனர். பக்கபலமாகயிருந்தோம். பலனை எதிர்பார்த்ததில்லை...பாரத மாதாவை அன்னை இந்திரா வடிவில் பார்த்த நெஞ்சங்கள் எங்கள் நெஞ்சங்கள்.

எங்கள் இதயங்கள் சோதனைச் சுமைதாங்கியாக ஆக்கப்பட்டது பல கட்டங்களில். நாடு அன்னையை இழந்தது. நாங்களும் அன்பையும் மரியாதையும் இழந்தோம். இது என்போல் கட்சியில் நீண்டகாலம் உழைத்து ஒதுக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல் தான். கட்சியிலிருந்த தமிழகத்தை சேர்ந்த பங்காளிகள், அடுத்தவரை வேதனைப்படுத்தி அதிலொரு மகிழ்ச்சியை அடைய விரும்பும் சுபாவத்தால் எங்களை புறக்கனித்து வேதனையூட்டி ஆனந்தப்பட்டனர்.

காங்கிரஸ் பல கட்டங்களில் நமது கொள்கைக்கு புறம்பானவர்களோடு சேர்ந்து தேர்தல் நடத்த உத்திரவிட்டது. அப்போதெல்லாம் யார் கூட்டும் வேண்டாம். நமது காலால் நாம் நிற்போம். பணிகளில் ஆயாசம் காட்டுவோர், மக்களை சந்திக்க தனிப்பட்ட முறையில் செல்வாக்கில்லாதவர்கள் சொல்வதை கேட்கவேண்டாமென்றேன். என்றாலும் 'கட்டளை'யென்றதும், கட்சியின் கட்டளையை ஏற்பதே எங்கள் கடமை' என்று கனத்த இதயத்தோடு நாங்கள் செயல்பட்டோம்.

ஒரு தனி மனிதன் மாபெரும் மக்கள் கூட்டத்தையே தன் பேச்சால், செயலால், பாசத்தால், பழகும் கனிவால், கவர்ச்சியால் தனது கட்சியை அகில இந்திய ரீதியாக ஆக்கிய வரலாறு தமிழகத்திற்கே உண்டு . இதையெல்லாம் கனித்து மனதில் வைத்துக் கொண்டுதான் இதுநாள்வரை நாங்கள் எவருக்கும் வலிக்காமல் யாரும் நோகாமல் கட்சியை பலப்படுத்தினோம்.


சில ஆண்டுகளுக்கு முன் புரட்சித்தலைவர் திரு எம்.ஜி.ஆர். உயிரோடுயிருந்தபோது, அவருடன் கூட்டு சேர்ந்து தேர்தலை நடத்தச் சொன்னார்கள். திரு எம்.ஜி.ஆர். பெயரையும், குறிப்பாக அவர் நேசித்த தாய்குலத்திடம் நாம் ஓட்டுப் பெற்றோம். இதை நாம் மறந்து விடக்கூடாது. மறந்தால் அவர்கள் நினைவுபடுத்துவார்கள். இரண்டாவது முறை கூட்டாக தேர்தல் நடத்தியபோது அருமை அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.

அவருடைய தொகுதியில் முகாமிட்டு அவருக்காக பிரசாரம் செய்து விட்டு அதற்கு பிறகு மற்ற இடங்களுக்குச் சென்று நான் தேர்தல் பிரசாரம் செய்ததை யாரும் மறுக்க முடியாது. - எனதருமை அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் காங்கிரஸ் கருத்தே தன்னுடைய கருத்தாக ஏற்று காங்கிரஸுக்கு உறுதுணையாக இருந்தாரே... காங்கிரஸே அதை மறந்தாலும் அவரது ரத்தத்தின் ரத்தங்கள் மறுப்பார்களா? ஏழை எளியோர்கட்கு வாழ்வளிக்கும் திட்டங்கள் முதல், இலங்கை ஒப்பந்தம் வரை பாரதப்பிரதமருக்கு தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைத்து தமிழகத்துக்கும் பிரதமருக்கும் ரத்தமும் சதையுமான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து, எப்படியெல்லாம் பாரதப்பிரதமரை அண்ணன் எம்.ஜி.ஆர்.

உள்ளத்தினாலும் தன் செயலாலும் பாராட்டினார் என்பது நமக்கு தெரியும். ஆண்டவன், தமிழகத்தை ஆண்டவனை தன்னிடம் அழைத்தபோது ஜனாதிபதி அவர்களும், பாரதப்பிரதமரும், மற்ற தலைவர்களும் வந்து கலந்து கொண்டு அருமை அண்ணனை மரணத்திலும் கௌரவித்ததை இன்னும் நாம் மறக்கவில்லை. தகப்பன் தலை சாய்ந்தால் பிள்ளைகள் சண்டையிடுவர். தலைவன் மறைந்தான்.

வாரிசுகள் பலப்பரிட்சை செய்து கொள்வர் இது வீட்டிலும், நாட்டிலும் நடப்பதுதான். அருமை அண்ணன் தனக்குப் பிறகு நடக்க கூடாது என நினைத்தது, விதிவிதமாக நடக்கிறது. நடப்பது உள் பூசல். நீரடித்து நீர் விலகாது. அது அவர்கள் சொந்தக்கட்சி விஷயம். அமைதியாக ஒரு முடிவு தெரியும் வரை மௌனம் சாதிப்பதே அரசியல் மரபு. ஒரு ஆளுங்கட்சி, அடிமட்ட மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற கட்சி, அதன் தனிப்பெரும் தலைவன் மரணத்தால் அனுதாபம் பெற்ற இந்த நிலையில் அனுபவமிக்க அரசியல் வித்தகர்களான நாம், அரசியல் சாஸனத்தை அரிஓம் என ஆரம்பித்து வைத்த நாம், “சத்யமேவ ஜெயதே" என்ற புனித வரிகளை பொன்வரிகளாகக் கொண்ட நாம், ஜனநாயக மரபுப்படி, அரசியல் முதிர்ச்சிப்படி, என்ன செய்ய வேண்டும் ? எப்படி நடந்து கொள்ள வேண்டும்?... என்றெல்லாம் இப்போதுள்ள நிலைமையில் நம் நிலை என்னவென்று காங்கிரஸ் கட்சி பலருடைய அபிப்ராயத்தை கேட்டபோது என்னையும் கேட்டது. என் எண்ணத்தையும் சொன்னேன்.

"அருமை அண்ணன் திரு எம்.ஜி.ஆர். மறைவால் அவர் எண்ணத்துக்கு மாறாக விதிவசத்தால் கட்சி இரண்டாக பிளந்திருக்கிறது. அந்த பிளவு தற்காலிகமா, நிரந்தரமா எவர் வெல்வார் என்பதை இப்போதைக்கு நாம் தலையிடாமல் தனித்து வெளியே இருந்து பார்த்து அறியவேண்டிய தராசு முள் போன்ற நிலையிலிருக்கிறோம். இருவரில் யாருக்கு பலமிருக்கிறதோ, அவர்கள் வந்து விட்டு போகட்டும் என்றேன். நாம் நடுநிலை வகிக்காமல் தவறாக நமக்குள்ள நிலையை பயன் படுத்தினால் தமிழக மக்களிடமிருந்து காங்கிரஸ் அந்நியத்தன்மை பெற்றுவிடும். திரு. எம்.ஜி.ஆர். தமிழக மக்களுக்கு நம்முடன் உருவாக்கி வைத்த தோழமை கெட்டுவிடும்.

அதனால் தமிழக மக்களின் கசப்பை, வெறுப்பை, காங்கிரஸிடமிருந்து விலகி போகும் மனப்பாங்கை சந்திக்க வேண்டி வரும் என்ற அச்சத்தையும் கூறினேன். எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம். தமிழகமே அருமை அண்ணனை இழந்து வேதனையில் ஆழ்ந்துள்ள இந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை சரியாக முறையாக இல்லாவிட்டால், இனி தமிழகத்தில் காங்கிரஸ் மக்கள் முன் செல்வது கடினமென்ற கருத்தைச் சொன்னேன்.

“நீங்கள் சொன்ன கருத்து சரி, அப்படியே ஆகட்டும்" என்றதே மேலிடம்! “ஆகட்டும் பார்க்கலாம்" என்பார் பெருந்தலைவர் காமராஜர். அப்படியே செய்வார். ஆனால் “அப்படியே ஆகட்டுமென்றவர்களோ" எப்படியோ ஆனார்கள்!


கடைசி வரை நடுநிலை வகிப்பதாகக் கூறி நம்பவைத்த காங்கிரஸ் கட்சி ஏனிப்படி தடுமாறியதோ தெரியவில்லை. “கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் இப்படி ஒரு தவறான பாதையைக் காட்டி விட்டதா ? " தவறான செயலுக்கு தவறான முடிவு வந்துவிடுமே.... நம் தமிழகத்தில் நடமாடும் சில முக்கியமான காங்கிரஸ் பிரமுகர்களால், அவர்கள் தூண்டுதலால், அவர்கள் சுயநலத்தால், நிலை...நடுநிலை மாற்றப்பட்டிருக்கிறது. இது ஜனநாயக மரபுக்கு உகந்ததா ? இது நம் அரசியல் பாரம்பரியத்துக்கே களங்கமல்லவா, வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் “நம்பியவரை நட்டாற்றில் விடுவது” காங்கிரஸின் சரித்திரத்திற்கே தலைகுனிவல்லவா.

இதனால் அரசியல் அந்தஸ்தை இழந்து விடுவோமென்ற அச்சமே வரவில்லையா? உயிரோடிருந்த கடைசி காலத்தில்... உடலில் மூச்சு ஒட்டிக்கொண்டிருந்தவரை காங்கிரஸ் கட்சி வெட்டிக் கொண்டு வாவென்றால் கட்டிக்கொண்டு வந்தவர் திரு. எம்.ஜி.ஆர். தான் உடல் நலமில்லாதபோது தன்னை நலன் விசாரித்து பாரதப் பிரதமர் எழுதிய கடிதத்தை “ஃப்ரேம்” போட்டு தன் படுக்கை அறையில் தலைமாட்டில் வைத்திருந்ததை பிரதமர் பார்த்து கண்கலங்கிய சேதியை படித்து நாமும் கண்கலங்கினோமே.

பண்டித ஜவஹர்லால் நேரு, அன்னை இந்திரா, பிரதமர் ராஜீவ்... இப்படி மூன்று தலைமுறையாக பாசம் காட்டி நேசக்கரம் நீட்டியதை அருமை அண்ணன் எம்.ஜி.ஆர். சொல்ல, மூன்று தலைமுறையாக திரு. எம்.ஜி.ஆர். குடும்ப நண்பர் என்று பிரதமரும் பல லட்சம் மக்கள் மத்தியில் கத்திபாரா முனையில் நேரு சிலை திறப்பு விழாவில் சொன்னாரே, அது இன்னும் நம் காதில் ஒலிக்கிறதே.

எனதருமை அண்ண ன் திரு. எம்.ஜி.ஆர். மரணத்துக்குப்பின், உலகமே வியக்க பண்டித நேருவுக்கு கிடைத்த அந்த “பாரத ரத்னா" விருதைத் தந்தீர்கள். அதைக் கொடுத்து அவர் மதிப்பை உயர்த்திய பெரியோர்கள்... அதற்குச் சில மணி நேரத்துக்குள்ளேயே முதுகில் கத்தியால் குத்துவது போல் இப்படி செய்து விட்டீர்களே, அவர் மனைவி திருமதி ஜானகி ராமச்சந்திரன் தன் கணவர் வழியில் பணி தொடர்வேன் என கூறி ஆதரவு கேட்டு டில்லி வந்தபோதே நிர்தாட்சண்யமாக மறுத்திருக்கலாம். நீங்கள் ஆள்வதில் விருப்பமில்லை என்று சொல்லி இருக்கலாம். அப்போது எதுவுமே சொல்லவில்லை. மாலையில் மௌனம். இரவு வரை “நடுநிலை" காலையில் கண் விழித்ததும் எதிராக வாக்களிக்க ஏவுகணைகள். என்னதான் அரசியல் என்றாலும் இதுபோன்ற நம்பிக்கை துரோக செயலை தர்மம் மன்னிக்காது. எம்.ஜி.ஆர். செத்ததும் தர்மமும் செத்துவிட்டதாக கருதி விட்டார்களா? அவர் செய்த தர்மம், தமிழகத்தின் ஒவ்வொரு மனத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள்..

நடந்திருப்பது அரசியல் சரித்திரத்திற்கே முரணான விஷயம். மனித குலம் ஏற்க முடியாத மாபெரும் கொடுமை. அனுபவமிருந்த கட்சியா இப்படி அநியாயமாக அடுத்தவர் உள் பூசலை தனக்கு சாதகமாக்குவது ? மக்கள் முன்னால், மக்களால் தரப்பட வேண்டிய செல்வாக்கை இப்படி தட்டிப்பிரிக்க யார் ஆலோசனை கூறினார்களோ.... அருமை அண்ணன் எனக்கே பாடமாக படிப்பினையாக ஆகிவிட்டார்.

அவருக்கே இப்படியென்றால்...? கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்காக உடல், பொருள், ஆவி அத்தனையும் தத்தம் செய்த நானும் என் மன்றத்து பிள்ளைகளும், பலவித வேதனை, சோதனை, அவமானங்களை தாங்கிப் பழகினாலும், இதுபோன்ற நம்பிக்கை துரோகச் செயலுக்கு உடந்தையாகயிருக்க மனச்சாட்சி இடந்தரவில்லை. என் கைகள் என் கண்ணைக் குத்தலாமா ? மனசாட்சியும் மனிதாபிமானமும் என்னை என் மன்றத்துப் பிள்ளைகளை தோற்கடித்த காரணத்தால் நாங்கள் காங்கிரஸிடமிருந்து பிரிகிறோம். உதவி கிடைக்காமல் பதவி கிடைக்காமல், உதறி நகரவில்லை .

எனக்கு நடந்தது உனக்கும் நடக்குமடா தம்பி என்று என் அருமை அண்ணன் எம்.ஜி.ஆர். என் உள்மனதை எச்சரிக்கிறார். எனதருமை தேசிய பெரியோர்களே, என் கண்ணின் இனிய காங்கிரஸ் தொண்டர்களே என்னைப் போலவே இதற்கு முன் பல கட்டங்களில் கட்சியின் போக்கால் விரக்தியடைந்த நண்பர்களே, நேரிலும், தொலைபேசி மூலம் என்னிடம் பேசிய நண்பர்களே, இந்த நேரத்தில் நான் யார் மீதும் குறை கூறி வெளியே செல்வதாக நினைக்க வேண்டாம்.

sivaji
இது போன்ற முடிவு நான் மட்டுமல்ல... பலரும் எடுக்க நேரிடலாம். இறுதியாக ஒரு வார்த்தை , தமிழகத்தைச் சேர்ந்த சில பெரும் புள்ளிகளை புனிதமான கட்சிக்குள் வைத்திருப்பது கட்கிக்கும், கட்சியின் பெருமைக்கும் கெடுதலைத் தரும் புற்றுநோய் என்பதை மறந்துவிட வேண்டாம். இனி நான் காங்கிரஸ்காரனாக கட்சியில் இல்லாவிட்டாலும் மற்ற மீதியுள்ள தேசிய தொண்டர்களாவது தயவு செய்து அவ்வப்போது நாட்டில் கட்சிக்கும் கட்சியால் நாட்டுக்கும் ஏற்படும் தவறுகளை ஆட்சிக்கு, குறிப்பாக தமிழகத்தில் எங்கே என்ன நடக்கிறதென்றே தெரியாத தலைநகரத்துக்கு, டில்லி மேலிடத்திற்கு விரிவாக விரைவாக எடுத்துச் சொல்லுங்கள்.

கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சிக்காக நான் ஆற்றிய தொண்டுகள் அத்தனையும் உங்களுக்கே சமர்ப்பணம். விட்டுச் செல்கிறேன்! விடை பெறுகிறேன்! இனி நான் காங்கிரஸ்காரனல்ல, இந்தியன்! அதிலும் “தமிழன்"! அன்புடன் சிவாஜி கணேசன்..!

- அஜெய் வேலு

Leave a Comment