தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், மொபைல் கடை வைத்து நடத்திவந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கடந்த மாதம் பலியாகியிருந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகப்பெரிய சர்ச்சையாக மாறிய இந்த விவகாரத்தினை தாமாக முன்வந்து எடுத்து நடத்தியது மதுரை கிளை உயர்நீதிமன்றம். வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “சி.பி.ஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு, நாளை தமிழகம் வருகிறது. நாளை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். தற்போது வரை சி.பி.ஐ தரப்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், ``சி.பி.சி.ஐ.டி, தற்போதைய நிலையை அறிக்கையாகத் தயார் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில், சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறையில் என்ன நடந்தது என்பதன் முழு விவரங்கள் இருக்க வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி’யோ, சி.பி.ஐ’யோ கைது செய்யப்பட்டவர்களைக் கைது செய்யப்பட்ட முதல் 15 நாள்கள் முடிவடைவதற்குள்ளாகக் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தற்போது, சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலையில் சி.பி.ஐ. குழு இன்று மதுரை வந்திறங்கியது. அங்கு ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
விசாரணை நாளைதான் தொடங்கப்படும் என்றிருந்தாலும், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் இன்று காலையே சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வந்துவிட்டார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர்தான், அவர்கள் அவர்களுடைய விசாரணையைத் தொடங்குவார்கள் என்று அறிவித்திருந்தனர்.
இதற்கிடையே தந்தை- மகன் மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அனைத்தும், தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மதுரை முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன.
அதன்காரணமாக தந்தை- மகன் சித்ரவதையின் போது பயன்படுத்தப்பட்ட 'லத்தி' உள்ளிட்ட பொருட்களும், வழக்குத் தொடர்பான தடயங்களும் மதுரை மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்டன.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தாக்கப்பட்ட நாளன்று, அங்கிருந்த காவலர் ரேவதி, பியூலா போன்றவர்களின் வாக்குமூலமும் இந்த விசாரணையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து, அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் செய்யப்படும் எனக்கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். இன்றைய தேதிக்கு, இந்திய அளவில் மாபெரும் பேசுபொருளாகியிருக்கும் இந்த விஷயத்தின் ஒவ்வொரு நகர்வும் மிகமுக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் குடும்பத்தினர், தங்களுக்கு நீதி கிடைப்பதை விட முக்கியம், இனிவரும் காலத்தில் எந்தவொரு நபருக்கும் இப்படியான அநீதி இழைக்கப்படாமல் இருப்பது என்று கூறியுள்ளனர்.
சி.பி.ஐ. விசாரணையில், நீதி நிலைப்பாட்டப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர்.
- பெ.மதலை ஆரோன்