பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் சீண்டல்.. போலீஸ்க்கு கட்டாய ஓய்வு..! 

பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் சீண்டல்.. போலீஸ்க்கு கட்டாய ஓய்வு..!  - Daily news

மாணவி உட்பட பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் சீண்டல் கொடுத்து வந்த காவல் ஆய்வாளர் ஒருவருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் சமீப காலமாக போலீசார் எல்லை மீறி செயல்பட்டு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாக மாறவிட்டது. அதற்கு, போலீசார் கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தமிழக அரசு தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது.

சாத்தான் குளம் லாக்கப் டெத் மரணம் தொடர்பாக போலீசார் மீதான சர்ச்சை அடங்குவதற்குள், மாணவி உட்பட பெண்களிடம் தொடர்ந்து எல்லை மீறி செயல் பட்டு வந்த காவல் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு, கட்டாய ஓய்வு அளித்து திருச்சி காவல் சரக துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி அடுத்த சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்து வந்த மணிவண்ணன் தான், இப்படி ஒரு தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார்.மணிவண்ணன் இதற்கு முன்பு தான் பணியாற்றிய காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்களிடம், நள்ளிரவு நேரத்தில் அல்லது தனியே சென்று விசாரணை என்கிற பெயரில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் உயர் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் குவிந்தது.
 
மேலும், தன்னுடன் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர்களிடமும், ஆய்வாளர் மணிவண்ணன், மிகவும் அநாகரிகமான முறையில் பேசுவதாகவும், அவர்களுக்கு பல்வேறு விதமான தொல்லைகள் தருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
 
அதே போல், திருச்சி பொன்மலை காவல் நிலைய ஆய்வாளராக மணிவண்ணன் இருந்த போது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்காகப் படிக்க வந்த இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் விசா தொடர்பாக, அவரை பார்க்க அவரது வீட்டிற்கே நேரடியாகச் சென்று உள்ளார்.

அங்கு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம், காவல் ஆய்வாளர் மணிவண்ணன், அந்த மாணவியைத் துன்புறுத்தி பலவந்தமாகப் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. படிக்க வந்த வெளிநாட்டுப் பெண்மணியிடம் ஒரு காவல் ஆய்வாளரே, மிகவும் தவறாக நடக்க முயற்சி செய்தது, காவல் துறை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரிய பிரச்சினையாக வெடித்தது.

இந்த புகார் காரணமாக, காவல் ஆய்வாளர் மணிவண்ணன், அதன் பிறகு பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பணி இட மாற்றம் செய்யப்பட்டார். பெரம்பலூரில் 
பணியாற்றிய போது, அங்குப் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நள்ளிரவு 12 மணிக்கு தொடர்பு கொண்டு விசாரணை என்ற பெயரில், தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்துப் பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காவல் ஆய்வாளர் மணிவண்ணனின் தொல்லை தாங்காமலும், அவரின் தொடர் பாலியல் சீண்டல் தொடர்பான பேச்சாலும் மிகவும் பயந்த போன அந்த பெண், திருச்சி காவல் சரக துணைத் தலைவரான டிஐஜி பாலகிருஷ்ணனிடம் புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட டிஐஜி பாலகிருஷ்ணன், இது தொடர்பாக நீதி விசாரணை மேற்கொள்ள அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். விசாரணையில், “காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பெண்களிடம் புகார் அளிக்க வரும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும்” தெரிய வந்தது. 

மணிவண்ணன் மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மணிவண்ணனை கட்டாய பணி ஓய்வில் செல்ல டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக, கட்டாய ஓய்வில் செல்வதற்கான உத்தரவு நகல், ஆய்வாளர் மணிவண்ணனுக்கு வழங்கப்பட்டது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர், உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி உள்ளார். ஆனால், அவர் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இதனையடுத்து, காவல் ஆய்வாளர் மணிவண்ணன், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதனிடையே, பெண்களுக்குத் தொடர் பாலியல் சீண்டல்கள் கொடுத்து வந்த சிறுகனூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து திருச்சி காவல் சரக துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ள சம்பவம், காவல் துறை வட்டத்தில் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment