தமிழகத்தில் சுகாதார பணியாளர் பெண்ணுக்கு முதல் கொரோனா தடுப்பூசி !
By Abinaya | Galatta | Jan 16, 2021, 12:59 pm
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தும் பணியை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் இன்று முதல் நாட்டின் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
காணொளியில் பேசிய மோடி, ‘’ மிகவும் குறுகிய காலத்தில் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக உழைத்த அனைத்து மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு சல்யூட். கொரோனா காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இரண்டு இந்திய தயாரிப்புகள் மூலம் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
மனிதம் இனம் ஒன்றை பெற நினைத்துவிட்டால், அதை எப்படியாவது சாதித்து விடும் என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றல் மற்றும் வலிமையை உலகிற்கு காட்டியுள்ளது. மேலும் இந்தியா சுயசார்பு நாடாக தொடர்ந்து செயல்பட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.
இதனை தொடர்ந்து, தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதார பணியாளர் முத்துமாரி என்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களை கேட்க, 1075 என்ற உதவி எண்ணில் அழைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.