தோனியின் அதிரடிப்படையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய ஒரு முன்னோட்டத்தை தற்போது பார்க்கலாம்..
14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 9 ஆம் தேதியான நாளைய தினம் தொடங்கி வரும் மே 30 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல் கடந்த 13 வது சீசன் தொடக்கம் வரை, தனி பெரும் சாம்ராஜ்ஜியத்தையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கென்று உருவாக்கி வைத்திருந்தது.
இது வரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்கிற சிறப்பு பெற்ற சென்னை அணியானது மொத்தம் 8 முறை அந்த பெருமையைத் தனதாக்கி இருக்கிறது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்று மகுடம் சூடியிருக்கிறது.
வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதன் முறையாக கடந்த 13 வது சீசனில் முதன் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
முந்தைய அனைத்து தொடர்களிலும் குறைந்தது ப்ளே ஆப் சுற்று வரை சென்ற சென்னை அணிக்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியே மிக மோசமானதாக அமைந்திருந்தது. கொரோனா அச்சம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகினார்கள் சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்து போனது.
அதே நேரத்தில், கடந்த சீசனில் ஜொலிக்க வீரர்களை சென்னை அணி வெறியேற்றி உள்ளது. அதன் படி, ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றார். சீனியர் சுழற்பந்துவீச்சாளர்களான பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் ஆகியோர் அணியிலிருந்தும் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை அணியில் சுழற்பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் மட்டும் இருந்து வந்த நிலையில், மேலும் பலம் சேர்க்கும் வகையில் புதிதாக கிருஷ்ணப்பா கவுதமை சென்னை அணி 9.25 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.
அதே போல், கடந்த போட்டியில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடி 13 போட்டிகளில் 449 ரன்கள் குவித்த தொடக்க வீரர் ஃபாப் டூ பிளெசிஸ், இந்த முறையும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பக்க பலமாக யார் களமிறங்குவார்கள் என்பது பெரும் குழப்பமாக இருந்து வரும் நிலையில், கடந்த சீசனில் ருத்ராஜ் கெய்க்வாட் கடைசி 3 போட்டிகளிலும் களமிறக்கப்பட்டு, 3 அரை சதங்களைப் பதிவு செய்திருந்தார்.
அத்துடன், இந்த ஆண்டு சென்னை அணிக்காக எடுக்கப்பட்டுள்ள ராபின் உத்தப்பா, தொடக்கத்தில் இறங்கி அதிரடி காட்டுவதில் சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர். இப்படியாக, இந்த இரு வீரர்களில் ஒருவருக்கு தொடக்கத்தில் களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
கடந்த ஐபிஎல் தொடரில் பங்கெடுக்காத சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், அவர் எப்போதும் களம் இறங்கும் ஒன் டவுனில் இந்த முறையும் களம் இறங்க உள்ளதால், தொடக்க ஆட்டக்காரர் யார் என்பதை பொருத்து ருத்ராஜ், உத்தப்பா, ராயுடு ஆகியோர், 4 வது மற்றும் 5 வது இடத்தில் களம் இறக்கப்படலாம் என்று பேசப்படுகிறது.
அதே போல், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர் என்று பெயரெடுத்துள்ள புஜாராவை, ஏலத்தில் எடுத்த சென்னை அணி, அவரை எந்த இடத்தில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
குறிப்பாக, சென்னை அணியின் முப்பெரும் தூண்களாக கருதப்படும் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் நீண்ட இடைவேளைக்குப் பின் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அணியின் வெளிநாட்டு ஆல் ரவுண்டர்களான சாம் கரன், டூவைன் பிரேவோ, மொயின் அலி ஆகியவர்களில் யாரை பிளேயிங் லெவனில் சேர்ப்பது என்பதும் சென்னை அணி எதிர்கொள்ள உள்ள சவளாக இருக்கிறது.
மேலும், சென்னை அணியில் தீபக் சஹார், லுங்கி இங்கிடி, ஷர்துல் தாக்கூர், சாம் கரன் என வேகப்பந்து வீச்சில் வரிசைக் கட்டி வீரர்கள் மிரட்டக் காத்திருக்கிறார்கள்.
சென்னை அணியில், எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, டுவைன் பிராவோ, ஃபாப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கே.எம்.ஆசிப், தீபக் சாஹர், நாராயண் ஜெகதீசன், கரன் சர்மா, லுங்கி இங்கிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சாய் கிஷோர், ராபின் உத்தப்பா, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், செட்டேஸ்வர் புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதனால், 14 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி, சீறிப்பாய காத்திருப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. சண்டை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருப்பதால், இந்த ஐபிஎல் சீசன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.