தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் தற்போதைய உடல்நிலை!
By Nivetha | Galatta | Sep 24, 2020, 01:42 pm
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் உள்ளாா். பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக அவா் பங்கேற்பதில்லை. இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்துக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மாற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக கட்சித் தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ``கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நடத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனையில் கடந்த 22 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.