கொரோனா பேரழிவில் உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் பாதிப்பு.. 34 ஆயிரம் பேர் பலி!
By Aruvi | Galatta | 11:42 AM
பேரழிவை ஏற்படுத்தும் கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், உலக நாடுகள் எல்லாம் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜெர்மனியின் நிதி அமைச்சர் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று தற்கொலை செய்துகொண்டார்.
இதுவரை சுமார் 200 நாடுகளுக்குப் பரவி உள்ள கொரோனா தொற்று, மிகப் பெரிய அளவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால், சுமார் 300 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதும் சுமார் 7 லட்சத்து 22 ஆயிரத்து 88 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 766 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதேபோல், 33 ஆயிரத்து 976 பேர் உலகம் முழுவதும் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இன்று பலி எண்ணிக்கை 34 அயிரத்தைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சீனாவில் 81,439 பேரும், ஸ்பெயின் நாட்டில் 80,110 பேரும், ஜெர்மனியில் 62,095 பேரும், பிரான்ஸ் நாட்டில் 40,174 பேரும், ஈரானில் 38,309 பேரும், பிரிட்டனில் 19,922 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சிங்கப்பூரில் 844 பேரும், பாகிஸ்தானில் 1,597 பேரும், இலங்கையில் 117 பேரும் என உலகம் முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778 ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பிரான்சில் கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 2606 ஆக உயர்ந்துள்ளது. இதனால், உலக மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியிலும், பீதியிலும் உரைந்தள்ளனர்.