உத்திரமேரூரில் திருமணமாகி இரண்டே மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் உத்தரமேரூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண் செந்தாரகை, படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.செந்தாரகையின் தந்தை பாலஜி, உத்திரமேரூர் தீயணைப்ப துறை அலுவலகத்தில் பணி புரிந்த வருகிறார். இவரது தாயார். அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மாதர் சங்கத்தில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார்.

இதனிடையே, செந்தாரகை அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்த நிலையில், இருவரும் பல இடங்களுக்குக் காதலர்களாக வெளியே சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த காதல் விவகாரம் செந்தாரகையின் தந்தை மற்றும் தாயாருக்குத் தெரிந்த நிலையில், கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அத்துடன், சம்மந்தப்பட்ட இளைஞரை அழைத்து, தங்கள் பதவி மற்றும் பவரை தவறாகப் பயன்படுத்தி கடுமையாக மிரட்டி அனுப்பி உள்ளனர்.

குறிப்பாக, செந்தாரகையை கடுமையாகத் தாக்கியும், மிரட்டியும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு மாப்பிள்ளைக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்து உள்ளனர். பெற்றோரின் கடுமையான மிரட்டல் காரணமாக, வேறு வழி தெரியாமல், செந்தாரகை திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்திற்குப் பிறகு அவர் கடும் மன உளைச்சலில் காணப்பட்டுள்ளார்.

மேலும், திருமணத்திற்குப் பிறகு செந்தாரகை, வீட்டை விட்டு வெளியே விடாமல் மாப்பிள்ளை வீட்டார் பார்த்துக்கொண்டதாகவும், இதனால் வீட்டிற்குள்ளேயே அவர் சிறை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், சரியாகச் சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான செந்தாரகை, என்ன செய்வது என்று யோசித்துள்ளார். அதன்படி, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் யாரிடமோ செல்போனை வாங்கி, ஜனநாயக மாதர் சங்கத்திற்கு குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

இதில், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு அந்த குறுஞ் செய்தி சென்றுள்ளது. அந்த குறுஞ் செய்தியில், “என் பெற்றோரால் எனக்கு ஆபத்து இருக்கிறது. உடனடியாக என்னை மீட்டு செல்லுங்கள். எனக்கு எதாவது நடந்தால், அதற்கு என் பெற்றோர் தந்தை பாலிஜி, தயார் ஜெயந்தி ஆகிய இருவரும் தான் முழு பொறுப்பு” என்று கூறி இருந்தார்.

மேலும், “ஒரு ஒன் விக்ல ப்ளீஸ் வந்து கூட்டிட்டு போங்க. உங்கள் அதிகாரி மட்டத்தில் பேசி விட்டு, என்னைக் கூட்டிச் செல்ல அதிகாரிகளை அனுப்பங்கள். எனக்கு பயமா இருக்கு. தயவு செய்து வந்து கூட்டிட்டு போங்க. இந்த செல்போனை எடுத்து, நான் யாருக்கும் தெரியாமல் மெசேஜ் பண்றேன். என்ன ஏதாச்சும் பண்ணிடுவாங்க” என்று அந்த குறுஞ் செய்தி அவர் கடைசியாக நிறைவு செய்கிறார். 

ஆனால், அடுத்த சில தினங்களில் செந்தாரகை, பெற்றோருடன் வீட்டில் இருக்கும் போது, மர்மமான முறையில் தற்போது உயிரிழந்துள்ளார். செந்தாரகை உயிர் இழந்ததை அடுத்த, அது குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், செந்தாரகையின் உடலை அவசர அவசரமாக அடக்கம் 
செய்துள்ளனர். 

இது குறித்து போலீசாருக்கு எப்படியோ தகவல் கிடைத்த நிலையில், செந்தாரகையின் வீட்டிற்கு சென்ற அவரது பெற்றோருடன் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, செந்தாரகை வீட்டில் பாத்ரூம் செல்லும் போது, வழுக்கி விழுந்து உயிரிழந்து உள்ளதாக முதலில் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், “மகள் தற்கொலை செய்துகொண்டதாக” அவரது பெற்றோர் கூறி உள்ளனர். இதனையடுத்து, செந்தாரகையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், செந்தாரகையின் உறவினர்கள், இளம் பெண்ணின் இறப்பில் மர்மம் இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு, செந்தாரகை அனுப்பிய குறுஞ் செய்தி தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால், பெற்ற மகளை, அவரது பெற்றோரே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது போலீசாருக்கு எழுந்துள்ளது. இருப்பினும் செந்தாரகையின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, உத்திரமேரூரில் திருமணமாகி இரண்டே மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.