ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து கொண்டே இருக்கிறது. அதிக நோயாளிகளைக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில், ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டே போய், இதோ இப்போது நான்காவது இடத்துக்கும் வந்துவிட்டது இந்தியா. விரைவில் இன்னும்கூட முன்னேறிவிடலாம் எனும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான நோயாளிகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் முக்கியமானது தமிழகம். ஏறத்தாழ தற்போது வரை 33 ஆயிரம் நோயாளிகளைக் கொண்டுள்ளது தமிழகம்.

ஆனால் தமிழக அரசோ, கொரோனா பரவுதலை சீரியஸாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை, மாறாக, ஊர்ப்பெயரும் அதிகாரிகளையும் மாற்றிக் கொண்டிருக்கிறது எனக்கூறி ஆதங்கப்படுகின்றனர் நம் செயற்பாட்டாளர்கள். குறிப்பாக நேற்றைய தினம் வெளியிட்ட சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்ற அறிக்கை, மிகப்பெரிய சர்ச்சையை அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணனனை அப்பொறுப்புக்கு நியமித்ததற்கு, பல்வேறு காரணங்களைச் சொல்கிறது அரசு. அதில் முக்கியமானது, அவருக்குப் பேரிடர் காலத்தைச் சமாளிப்பதில் முன்னனுபவம் இருக்கிறது என்பது. அது உண்மையும்கூட. சுனாமி, சென்னை பெருவெள்ளம், டெங்கு பரவுதல், கும்பகோணம் தீ விபத்து போன்ற நேரத்தில், தீவிரமாகச் செயல்பட்டு பாராட்டுகளைக் குவித்தவர் ராதாகிருஷ்ணன். அதனால் முன்அனுபத்தை அடிப்படையாக வைத்தே, அவருக்குப் பதவி தந்தோம் என்கிறது அரசு. 

இருப்பினும், எதிர்க்கட்சிகளும், செயற்பாட்டாளர்களும் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. காரணம், பீலா ராஜேஷூக்கு அனுபவமில்லையென்றபோதும்கூட, அவர் மிகமிக சிறப்பாகவே கொரோனா சூழலைக் கையாண்டார் என்பது. அதேபோல, பதவி மாற்றத்துக்கு முந்தைய தினங்களில்தான், மிக நேர்த்தியான எண்ணிக்கை சார்ந்த வெளியீடுகளை அளித்திருந்தார் பீலா ராஜேஷ். அதனால்கூட அவர் மாற்றப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், ராதாகிருஷ்ணனோடு ஒப்பிடுகையில், பீலா ராஜேஷை பணிமாற்றம் செய்தது வரவேற்கத்தக்க விஷயம்தான் என்கின்றனர் சிலர். பீலா ராஜேஷிடமிருந்த மிக முக்கியமான பிரச்னை, அவரை எளிதாகத் தொடர்பு கொள்ள முடியாது என்பது. பத்திரிகையாளர்கள் தொடங்கி உடனிருப்பவர் வரை, எவராயிருப்பினும் பீலா ராஜேஷை தொடர்பு கொள்வது சிரமம்தான். ``ஆனால் ராதாகிருஷ்ணன் அப்படியல்ல. பிரச்னைகளை களத்திலிருந்து கேட்டு, உடனடியாக நடவடிக்கையும் எடுப்பார். தலைமை எப்போதும் தனக்குக் கீழுள்ளவர்களோடு இணைப்பிலேயே இருக்க வேண்டும். அந்தப் பண்பு, ராதாகிருஷ்ணனுக்கு உள்ளது" எனக்கூறியுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவரும் செயற்பாட்டாளருமான ரவீந்திரநாத். இவர் சொல்வது போலப் பார்த்தால், அரசியல் சார்ந்த இந்த பணியிட மாற்றங்கள், கொரோனா நடவடிக்கைகளில் பின்னடைவை ஏற்படுத்தாது என முழுமையாக நம்பலாம். இப்போதைக்கு, நல்லது நடந்தால் சரிதான்!