“கன்னித்தீவ தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க..” என்று, தெறிக்கவிட்ட திருமண பேனரால் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஆள் கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் ஈடுபட்டுத் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் நித்தியானந்தா யாரைக் கவர்ந்தாரோ இல்லையோ, இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டார். இதனால், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் எல்லாம் சாமியார் நித்தியானந்தாவின் படத்தைப் போட்டு பேனர் வைக்கும் அளவிற்கு நித்தியானந்தா புகழ் வையகம் பரவி உள்ளது.

பலர், இணையத்தில் சாமியார் நித்தியானந்தாவின் வசனங்களை தங்களுடைய ஸ்டேட்டஸ்  மற்றும் மீம்ஸ்களாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது எல்லா வித ஆச்சரியங்களையும் மிஞ்சும் அளவுக்கு மணப்பாறை பகுதி இளைஞர்கள் திருமண பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது தான், ஒட்டு மொத்த ஆச்சரியத்திலும் ஹைலைட்டாக மாறிப்போய் உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மேலமஞ்சம்பட்டியைச் சேர்ந்த இளைஞரான சங்கர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள அத்திப்பள்ளத்தைச் சேர்ந்த திலகவதி என்பவருக்கும் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளையின் நண்பர்கள் மணமக்களை வாழ்த்தி திருமண பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் இடம் பெற்ற படமும், வாசகமும் தான், தற்போது அனைவரையும் இமை உயர்த்த வைத்திருக்கிறது.

அந்த பேனரில், மணமக்களை வாழ்த்தி உள்ள நண்பர்கள், “பல வருஷமா கன்னித்தீவைத் தேடி நாயா அலையிற சிந்துபாத் எங்க.. கன்னிகளை வச்சே ஒரு தீவு ரெடி பண்ணுன நம்ம நித்தியானந்தா எங்க..” என்று குறிப்பிட்டு இருக்கின்றர்.

மேலும், சாமியார் நித்தியானந்தாவின் படத்திற்கு நேரமாக “No சூடு.. No சொரணை..” என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளனர். 

அந்த பேனரில் ஹைலைட்டாக, இந்த பேனரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஒட்டுமொத்த நண்பர்களின் படத்தையும் போட்டு, அந்த படத்திற்குக் கீழே “கைலாசம் செல்ல விரும்பும் நண்பர்கள்” என்றும், அதில் கூறியிருக்கிறார்கள். இதனால், அந்த திருமண பேனர் பார்ப்பதற்கு காமெடியாக தெரிந்தாலும், பார்ப்பவர்களை அங்கே ஒரு நிமிடம் நின்று, கண் புருவத்தை உயர்த்தி பார்க்க வைக்கிறது. இதன் காரணமாக, இந்த திருமண பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அத்துடன், இந்த பேனர் விசயம் காட்டுத் தீ போல நேற்று அந்த பகுதியில் உள்ள வாட்ஸ்ஆப் குழுவில் வேகமாகப் பரவியதால், தகவலறிந்து இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை போலீசார், நித்தியானந்தாவின் புகைப்படம் பொருத்தப்பட்ட அந்த திருமண பேனரை உடனடியாக அகற்றினர். இதன் காரணமாகவும், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. 

இதேபோல், திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களின் நண்பர்கள் சாமியார் நித்தியானந்தாவின் படத்தைப் போட்டு பேனர் வைத்திருந்தனர். அந்த பேனரில், வாழ்த்துவது போல் தங்களது படங்களைப் போட்டு இப்படிக்குக் கைலாச வாசிகள்” என்ற வாசகத்தையும் இடம் பெறச் செய்திருந்தனர். இதனால், அந்த பேனரும் இணையத்தில் வைரலானது.