ஆழியாறு அணையில் நாளை முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் அறிவிப்பு!
By Madhalai Aron | Galatta | Oct 06, 2020, 03:43 pm
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை அமைந்து உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் அப்பர் ஆழியாறு அணைகளில் இருந்து நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.
இதற்கிடையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 20-ந் தேதி அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி 7 மதகுகள் வழியாக உபரிநீர் ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அப்பர் ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறுக்கு அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து 9 மதகுகள் வழியாக அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் வெளியேற்றுவது குறைக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1385 கன அடி நீர்வரத்து உள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 119.35 அடியாக உள்ளது.
இதேபோன்று நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 3285 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 71.62 அடியாக உள்ளது. சோலையாரில் 4 மி.மீ., பரம்பிக்குளத்தில் 3 மி.மீ., வால்பாறை 4 மி.மீ., மேல்நீராறு 6 மி.மீ., கீழ்நீராறு 3 மி.மீ., மணக்கடவு 1 மி.மீ. மழை பதிவானது.
இதைத்தொடர்ந்து, ஆழியாறு அணையில் இருந்து, நாளை முதல் தண்ணீர் திறந்து விட, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை, 'அ' மண்டலத்தில் உள்ள பாசன பகுதிகளுக்கு, ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு, நாளை முதல், 80 நாட்களுக்கு உரிய இடைவெளி விட்டு, தண்ணீர் திறந்து விட, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாக்களில் உள்ள, 22 ஆயிரத்து, 116 ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
`கோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பாசன பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு அணையில் இருந்து ஆழியாறு படுகை ‘அ’ மண்டலத்தின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம் சேத்துமடை கால்வாய் ‘அ’ மண்டலம் மற்றும் ஆழியாறு ஊட்டு கால்வாய் ‘அ’ மண்டல பாசன பகுதிகளுக்கு நாளை (புதன்கிழமை) முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு மொத்தம் 2 ஆயிரத்து 548 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும்'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது