ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய சசிகலா! “ஆஸ்கர் விருதுக்கான நடிப்பு” என விமர்சித்த ஜெயகுமார்..
ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா, “என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில்
இறக்கி வைத்து இருக்கிறேன்” என்றும், கூறியுள்ளார்.
அதிமுகவின் 50 வது ஆண்டு தொடக்க விழா நாளைய தினம் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, இன்றைய தினம் அதிமுக கொடி பொருத்திய
காரில் புறப்பட்ட சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, வழிநெடுக அவருடைய ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும்
அவருடைய ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது.
அதாவது, சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பின் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
சசிகலா, சிறைக்கு செல்லும் முன்பாக, ஜெயலலிதா சமாதியில் சபதமொன்றை எடுத்திருந்தார். அதன் பிறகு, சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அப்போதைய
முதலமைச்சராக இருந்த எடப்படி பழனிசாமி, கொரோனாவை காரணமாக காட்டி, பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதித்திருந்தது.
இதனையடுத்து, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, “தமிழ்நாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக” சசிகலா அறிவித்திருந்தார்.
அதன் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாளர்களிடம் தொடர்ந்து தொலைபேசியின் மூலமாக சசிகலா பேசி
வந்தார்.
இந்த நிலையில் தான், இன்று பல ஆண்டுகள் கழித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா, கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த
பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து உள்ளேன்” என்று, குறிப்பிட்டார்.
“அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றும், சசிகலா வெளிப்படையாகவே பேசினார்.
மேலும், “நான் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்ததற்கான காரணம், அனைவருக்கும் தெரியும் என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே
வாழ்ந்தனர்” என்பதையும் சசிகலா சுட்டிக்காட்டி பேசினார்.
இதனைத் தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் சென்று அவரது சிலைக்கு சசிகலா மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் தான், “அதிமுக கொடியுடன் இன்று ஜெயலலிதா நினைவிடம் சென்று கண்ணீருடன் மரியாதை செலுத்திய சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது
கொடுக்கலாம்” என்று, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மிக கடுமையாக விமசிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.