விநாயகர் சிலை வைக்க கோரிய மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம்! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
By Nivetha | Galatta | Aug 18, 2020, 05:45 pm
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பொது இடங்களில் விநாயகர் சிலையை வைப்பது வழக்கம். ஆனால் நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், விநாயகர் சிலை வைக்கவும், அதை ஊர்வலமாக எடுத்து செல்லவும் மாநில அரசு தடைவிதித்துள்ளது. இப்படியான நிலையில், இவற்றை அனுமதிக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பாஜக மாநில தலைவர் எல். முருகன் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ``முதலமைச்சரைச் சந்தித்து 40 ஆண்டுகாலமாக பொதுமக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்பட்டு, சமூக இடைவெளியோடு கொண்டாட அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டிருக்கிறோம். ஆலோசித்து சொல்வதாக கூறியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படும் விழா. தமிழகத்திலும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். நாங்கள் அரசு சொல்லும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, வழிபட்டு, கரைப்பதாக சொல்லியருக்கிறோம்" என்றார்.
முதல்வருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மட்டும்தான் பேசியதாகவும் தெரிவித்தார் எல். முருகன்.
விநாயகர் சிலையை வைக்க அனுமதித்தாலும் ஊர்வலம் செல்லாமல் எப்படிக் கரைப்பீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "விநாயகர் சிலைகளை கோவில் வாசல்களில், வீடுகளில் வைத்து வழிபட்டுவிட்டு அரசு சொல்லும்படி செய்வோம். பொதுமக்களின் கருத்தையே முதல்வரிடம் தெரிவித்தேன்" என்றும் முருகன் தெரிவித்தார்.
தமிழக அரசு கடந்த 13-ந்தேதி வெளியிட்ட அரசாணையில், விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்று தடை விதித்து இருந்தது.
அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை வைத்து வழிபட அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில்,
``தமிழகத்தில் தினமும் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவும் சூழல் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதிக்க முடியும்?
கொரோனா தாக்கம் இல்லை என்றால் விநாயகர் சதுர்த்தி நடத்துவதில் நீதிமன்றம் ஏன் தலையிடப் போகிறது? இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும், மனுதாரர் மனுவை திரும்ப பெறாவிட்டால் அதிக அபராதம் விதித்து தள்ளுபடி செய்ய நேரிடும்" என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக சிவகங்கையில் பேசிய ஹெச். ராஜா ``மதுக்கடைகளுக்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முடிவை உடனடியாக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். அரசின் உத்தரவு மத சுதந்திரத்தில் தலையிடுகிற செயலாக உள்ளது. இது இந்துக்களை நசுக்கின்ற செயலாக நான் கருதுகிறேன்.
மதச்சடங்குகளில் தலையிடுவதற்கு, அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. போகப்போக அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்கு அராஜகப் போக்காக மாறி வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஆடித் திருவிழாவிற்கு அனுமதி மறுத்துள்ளார். அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது