அட பாவி.. தூங்கிக் கொண்டிருக்கும்போது சிறுமிக்கு தாலி கட்டிய கொடுமை!
By Aruvi | Galatta | Jul 11, 2020, 05:05 pm
வேலூர் அருகே இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி அடைந்த சிறுமி விடிந்ததும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், அந்த சிறுமி கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார்.
இதனால், சிறுமியின் போக்கில் விட்டுப் பிடித்த அவரது பெற்றோர், நேற்று முதல் நாள் நள்ளிரவில், அந்த கொடுமையை நிகழ்த்தி உள்ளனர்.
சிறுமி, தனது பாட்டி வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில், சிறுமியின் கால்களைக் கட்டிப்போட்டு விட்டு, சிறுமியை தூக்கத்திலிருந்து எழுப்பி உள்ளனர். சிறுமி கண் திறந்து பார்த்த நிலையில், எதிரே மணக் கோலத்தில் மாப்பிள்ளை மாலையுடன் தயாராக இருந்துள்ளார்.
இதனையடுத்து, சுதாரித்து அங்கிருந்து சிறுமி தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போதுதான், தன் கால்கள் கட்டி வைக்கப்பட்டிருப்பது சிறுமிக்கு தெரிய வந்தது. இதனால், வேறு வழியின்றி அங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாமல், சிறுமி அங்கு மாட்டிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் கைகளை அவரது பெற்றோர் பிடித்துக்கொண்ட நிலையில், அந்த மணமகன் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டி உள்ளான். இரவு முழுவதும் கல்யாண பீதியில் உறக்கம் இன்றி தவித்த சிறுமி, விடிந்ததும் காலையில் வீட்டில் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாமல், அங்கிருந்து தான் படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒருவரின் உதவியுடன், விருத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்து, நள்ளிரவு நேரத்தில் தன் கால்கள் கட்டப்பட்ட நிலையில், தனக்கு நடந்த சிறார் மற்றும் கட்டாயத் திருமணம் குறித்து, புகார் அளித்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமிக்கு நடந்த கட்டாய திருமணம் குறித்து, போலீசார் சமூக நலத்துறைக்குப் புகார் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சிறுமியின் பாதுகாப்பு கருதி, சிறுமியை அந்த பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதனால், காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் நடைபெற இருந்த 3 குழந்தைத் திருமணங்களை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கர்ணாம் பட்டு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை சேர்ந்த 17 வயது சிறுமி, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஆகிய சிறுமிகளுக்கு நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் படி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்தனர்.
இதில், மீட்கப்பட்ட 3 சிறுமிகளும் அந்த பகுதியில் உள்ள அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்ற இருக்கிறதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சிறுமிகளுக்குக் குழந்தை திருமணத்தை நடத்த முயன்ற அவர்களது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.