பழங்களை சாலையில் வீசிய வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் செயலுக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் மன்னிப்பும் கோரி, இழப்பீடும் வழங்கினார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் நிலையில், சில தளர்வுகளை மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. அதன்படி, தமிழகம் முழுவதும் டீ கடைகள் முதல், பழக்கடைகள் வரை ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு வருகின்றன.

Vaniyambadi Municipality commissioner Explanation

அதன்படி, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சில கடைகள் திறக்கப்பட்டன. அப்போது, திறக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்வதற்காக நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அங்கு, பெண் ஒருவர் வியாபாரம் செய்து வந்த தள்ளுவண்டிக் கடைக்குச் சென்ற நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், தனி மனித இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் கூறி, வண்டியில் உள்ள வாழைப்பழங்களை எடுத்து சாலையோரம் வீசினார்.

மேலும், அங்குள்ள பழக்கடை ஒன்றில், ஊரடங்கு விதியை பின்பற்றவில்லை எனக் கூறி, தட்டோடு பழங்களைக் கீழே தள்ளிவிட்டார். 

அங்குள்ள மற்றொரு பழக்கடையில் அடுக்கிவைக்கப்பட்ட பலகையை தள்ளிவிட அன்னாசி, சப்போட்டா உள்ளிட்ட பழங்கள் சாலையில் உருண்டோடின. அத்துடன், பழங்களோடு விற்பனைக்கு வைத்திருந்த தள்ளுவண்டியை, அப்படியே குப்புறக் கவிழ்த்துவிட்டார்.

Vaniyambadi Municipality commissioner Explanation

நகராட்சி ஆணையர் சிசில் தாமஸின் இந்த செயல்பாடுகள் அனைத்தும், வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். நகராட்சி ஆணையரின் மனிதம் மீறிய இத்தகைய செயல்பாடு, மக்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது.

இது தொடர்பாக நமது கலாட்டா அரசியல் பிரிவு ஆசிரியர் விக்ரமன், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸிடம் தொலைப்பேசி வாயிலாக விளக்கம் கேட்டார். அதை தற்போது பார்க்கலாம்..

“பழக்கடை விவகாரம் தொடர்பாக உங்களுடைய விளக்கம் என்ன சார்?”

“பலமுறை எச்சரிக்கை செய்தேன். முகக்கவும் போடனும், கையுறை போடனும். ஒரே இடத்தில் விற்காமல், வீடு வீடாகச் சென்று விற்பனை செய்ய வேண்டும்  என்று சொன்னேன். அவர்கள் அதைக் கேட்காமல், கடைபோட்டார்கள். பல முறை சொல்லியும் கேட்கல. அதனால, கொஞ்சம் எமோஷனல் ஆகி இப்படி பண்ணிட்டேன். அப்பறம், வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டேன்” என்று விளக்கம் அளித்தார். 

Vaniyambadi Municipality commissioner Explanation

“சட்டப்படி சில விதிமுறைகள் இருக்கும்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பழங்களை இப்படி எடுத்து குப்பையில் போட உங்களுக்கு அதிகாரம் இருக்கா?”

“அது போட்டது அழுகிய பழம்” என்று சிசில் தாமஸ் சொல்லி முடிப்பதற்குள்,

“இல்ல சார், அது எல்லாம் நல்ல பழங்கள். வீடியோவில் தெளிவாக இருக்கிறதே” என்று விக்ரமன் கேட்க,

“இல்ல சார், அது அழுகிய பழங்கள் சார். நேரில் பார்த்தால் அது தெரியும். அவ்வளவு எல்லாம் அநாவசியமாக நான் எதுவும் பண்ணல.. எதோ ஒரு இதுல.. இப்படி பண்ணிட்டேன். என்ன பண்றது? என்று” வருத்தப்படும் தொணியில் அவர் பாவமாகப் பேசினார்.

Vaniyambadi Municipality commissioner Explanation

“தற்சார்பு பொருளாதாரம் பற்றி பிரதமர் நேற்றுதான் பேசுகிறார். தெருவோர கடை வியாபாரிகள் இந்த ஊரடங்கால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படிப்பட்ட சூழலில், நீங்கள் நடந்துகொண்டது மனிதாபிமான செயலா?”

“கைக்கு உரை கூட இல்ல. எவ்வளவோ சொல்லியும், அவர்கள் எதையும் கடைப்பிடிக்கல்ல. இதனால், கடைக்கு வருபவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு இருக்கு. அப்படி, எதுவும் நடக்ககூடாதுங்குறதுக்காக தான், இப்படி பண்ணிட்டேன்” என்றார்.

“இது தொடர்பாக உயர் அதிகாரிகள் யாரும் உங்களைத் தொடர்பு கொண்டார்களா சார்?”

“எல்லாம் பேசியிருக்கிறார்கள்.. எல்லா தகவலும் சொன்னார்கள்”

“இதற்கு எதுவும் வருத்தம் தெரிவிக்கிறிங்களா?”

“ஆமா சார், தெரிவிக்கிறேன்”

“பாதிக்கப்பட்டவர்களுக்கு எதாவது இழப்பீடு கொடுக்குறிங்களா?”

“காலையிலேயே கொடுத்துட்டேன் சார். அரிசி, பழத்திற்கான நஷ்ட ஈடு எல்லாவற்றையும் கையில் கொடுத்துட்டு வந்திருக்கிறேன்”

“இப்போதுள்ள சூழலில், பொதுமக்களின் கவனத்தைப் பெறுவதற்காக அதிகாரிகள் சிலர் கொஞ்சம் அதிகமாகவே நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டு வருதே?”

“அது.. தெரியல சார்” என்று, சிசில் தாமஸ் சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

சிலரைப் பார்க்கும்போது, மனிதம் இன்னும் வாழ்கிறது என்று தோன்றும். அப்படி வாழ ஆசை வரும். சில அதிகாரிகளை, அதிகாரம் படைத்தவர்களைப் பார்க்கும்போது, மனிதம் எப்போதே செத்துவிட்டது என்று தான் தோன்றும். அப்படியான, மனிதம் மறந்த கதை இது.

இந்த கட்டுரை தொடர்பான வீடியோவைப் பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.