என்கவுன்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி தெரியுமா?
By Aruvi | Galatta | Jul 10, 2020, 10:46 am
8 போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான பிரபல ரவுடி விகாஸ் துபே கான்பூர் அருகே, தப்பிச் செல்ல முயன்ற போது என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான ரவுடி விகாஸ் துபே, கான்பூர் அருகில் உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேயை தேடி வந்த கான்பூர் டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ராவுக்கு இந்த தகவல்
கிடைத்தது. இதனையடுத்து, டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் மொத்தம் 8 போலீசார் அவர் பதுங்கி இருப்பதாக கூறபட்ட இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு, போலீசாரை கண்ட அந்த ரவுடி கும்பல் போலீசாரை தாக்கத் தொடங்கினார். இதனால், போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடி கும்பலுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலின் முடிவில் ரவுடிகள் கண்மூடித்தனமாகச் சுட்டதில், டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 போலீசாரும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், சில போலீசார் படு காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
ரவுடிகிளை பிடிக்கச் சென்ற போது, ரவுடிகளால் தாக்கப்பட்டு போலீசார் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, உத்தர பிரதேச மாநிலம் உட்பட நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உத்தர பிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அப்போது, கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட 60 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ரவுடி விகாஸ் துபே தலைக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த கான்பூர் போலீஸார், பல்வேறு மாநிலங்களில் அவரை தேடி வந்தனர்.
இதனையடுத்து, கடந்த ஒரு வாரக் காலமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் ரவுடி விகாஸ் துபேவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வந்தது.
அப்போது, ரவுடி விகாஸ் துபேவின் நண்பர்கள் இருவர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், ரவுடி விகாஸ் துபேவின் மனைவி மற்றும் மகனும் லக்னோவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
ரவுடி விகாஸ் துபேவின் நெருக்கமானவர்கள் எல்லாம் கொல்லப்படுவதும், தன்னை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவதுமாக இருந்த நிலையில், தன்னை போலீசார் நெருங்கிவிட்டதை அவர் உணர்ந்துள்ளார்.
இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற அதவும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் மகாகல் கோயிலுக்கு வந்த ரவுடி விகாஸ் துபே, கோயிலுக்குள் வந்து தரிசனம் செய்தவர்க்காக, 250 ரூபாய் மதிப்பிலான விஐபி டிக்கெட்டையும் வாங்கி சாமி தரிசனம் செய்தார். இதனால், பொதுவெளியில், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ரவுடி விகாஸ் துபே முற்பட்டது தெரிய வந்தது. இதனால், போலீசாரிடம் அவர் சரணடைய வந்ததாகக் கூறப்படுகிறது.
கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த ரவுடி விகாஸ் துபேவை சுற்றி வளைத்த போலீசார், அவரை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அப்போது, ரவுடி விகாஸ் துபே போலீசாரை குரல் உயர்த்திப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், போலீசார் ஒருவர் அவர் கண்ணத்தில் அறைந்து, வண்டியில் ஏற்றி உள்ளார்.
அதன் பிறகு, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வைத்து ரவுடி விகாஸ் துபேவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணைக்குப் பிறகு, மத்தியப்பிரதேசத்தில் இருந்து உத்திரப்பிரதேசம் மாநிலம் கான்பூருக்கு விகாஸ் துபேவை உத்திரப்பிரதேச சிறப்பு போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று உள்ளனர்.
அந்த நேரத்தில் நன்றாக மழை பெய்துள்ளது. கடும் மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும் போது பாதுகாப்புப் பணிக்கு வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக, தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்போது, விபத்தைப் பயன்படுத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றுள்ளார். இதனால், வேறு வழி இல்லாமல், ரவுடி விகாஸ் துபேவை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகத் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், “தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி சுடும் சத்தத்தைக் கேட்டதாக” சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக பேசிய போலீசார், கார் விபத்துக்குள்ளான போது, அதை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயல்வது தொடர்பாக, துப்பாக்கியை காட்டி எங்களை மிரட்டினார் என்றும், அதன் காரணமாகவே, பதிலுக்கு போலீசாரும் அவரை சுட வேண்டியதாக நிர்பந்தம் ஏற்பட்டதாகவும்” போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.