இன்று சந்திர கிரகணம்! என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது??
By Aruvi | Galatta | Jun 05, 2020, 10:33 am
2020 ஆம் ஆண்டின் 2 வது சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் நிகழ்கிறது.
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது, சூரிய ஒளி நிலவின் மீது படாமல், பூமி மறைந்து காணப்படுவதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது.
அதன்படி, 2020 ஆம் ஆண்டின் 2 வது சந்திர கிரகணம் இன்று நிகழ இருக்கிறது. இன்று தொடங்கும் சந்திர கிரகணம், இன்று மற்றும் நாளை இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளது.
குறிப்பாக, இந்திய நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்குத் தொடங்கி, நாளை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. அத்துடன், வானிலையில் எந்த மாற்றமின்றி தெளிவாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் இதனை முழுமையாகக் காண முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இது முழுமையான சந்திர கிரகணம் கிடையாது என்றும், இந்த கிரகணத்தின்போது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. இதேபோன்ற பிறநிழல் நிலவு மறைப்பு சந்திர கிரகணம், கடந்த ஜனவரி 10 ஆம் தேதியும் நிகழ்ந்தது. தற்போது, 2 வது முறையாக தற்போது நிகழ்கிறது.
சந்திர கிரகணம் என்பது, அறிவியல் முறைப்படி, எந்த பாதிப்பும் அற்ற பாதுகாப்பான ஒன்று என்று கூறப்படுகிறது. ஆனால், சந்திர கிரகணத்தின்போது என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்று நமது முன்னோர்கள் சில வழிமுறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
அதன்படி, சந்திர கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், கிரகணத்தின் போது ஏற்படும் தீமையின் தாக்கத்திலிருந்து விலக முடியும் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர்.
அதேபோல், உணவுப்பொருட்களில் துளசி இலையைச் சேர்ப்பது மற்றவர்களுக்கு யாசகம் வழங்குவது போன்றவற்றைச் செய்யலாம் என்றும் கூறி வைத்துள்ளனர்.
குறிப்பாக, சந்திர கிரகணத்தின் போது உணவு உட்கொள்ளக் கூடாது என்றும், கிரகணம் ஆரம்பிக்கும் 3 மணி நேரத்திற்கு முன் உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுவதுண்டு.
மேலும், சந்திர கிரகணத்தின்போது, வெளியே செல்லக்கூடாது என்று கூறப்படுவதும் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.