`தேர்தலில் ஜெயிக்க வைத்தால், இன்னவோ கார் பரிசு!' - பாஜக தலைவர் முருகனின் அதிரடி அறிவிப்பு
By Nivetha | Galatta | Aug 16, 2020, 06:34 pm
2021 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் ஆயுத்தமாகி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக கட்சியினரிடையே மும்முனை போட்டி நிலவும் என கூறப்படுகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ. பன்னீர்செல்வமா என்ற விவாதம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. திமுகவில், நிர்வாகிகள் கட்சி மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதற்கிடையில், தற்போது கூட்டணி கட்சிகளாக அறியப்படும் அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மாறி, மாறி விமர்சனம் செய்து வருவதால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்பது கேள்விக்கு உட்பட்டுள்ளது. இதற்கிடையில், ``பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும், பாஜக – திமுக இடையே தான் போட்டி" என்று வி.பி.துரைசாமி அண்மையில் கூறியிருந்தது அதிமுகவினரை குழம்பவைத்தது.
இவற்றின் காரணமாக, 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் இன்றைய தினம் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.
அதில் பேசியவர், ``அடுத்த ஆறு மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ஆகையால் தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட வேண்டும்" என்று பேசியிருந்தார். பின்னர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
``2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும். பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு 'இன்னோவா கார்' பரிசு அளிக்கப்படும். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.
இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்ற எல்.முருகன் அறிவிப்பு, பாஜகவினரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பதவியேற்றது முதல் அக்கட்சியில் பல்வேறு பரபரப்பு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. திமுகவில் இருந்து இரண்டு முக்கிய பிரமுகர்களை வளைத்ததோடு சினிமா, தொழில்துறைகளில் இருந்தும் பல பிரபலங்களை பாஜகவில் இணைத்து வருகிறார் எல்.முருகன். இதற்காக தனிக்குழுவை அமைத்துள்ள அவர் கட்சியை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கவனித்து வருகிறார்.
பிற கட்சிகளோடு ஒப்பிடுகையில் அரசியல் சூழலுக்கு முழு தயார் நிலையில் இருப்பது பாஜகதான். திரைநட்சத்திரஙகள் பலரையும், கட்சியில் இணைத்திருக்கும் பாஜவிற்கு, சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஆதரவு தரவிருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்கும்பட்சத்தில், அவருக்கு பாஜக துணை நிற்கும் என்று எதிர்பார்க்கவும் படுகிறது. காரணம், பாஜகதான் ரஜினியை இன்றைய தேதிக்குச் சிறந்த மாற்றாக இன்றுவரை பார்க்கிறது. அதேபோல ரஜினியும், மோடி அரசின் மீதோ - பாஜக மீதோ இன்றுவரை மிக இணக்கமாக இருந்துவருகிறார்.
இன்னவோ கார் பரிசு - நட்சத்திரஙக்ளோடு கைக்கோர்த்தல் போன்ற பாஜகவின் தேர்தல் அரசியல் வியூகங்கள், மக்கள் மத்தியியிலும் ஓட்டு வங்கியிலும் எந்தளவுக்குப் பலனை அடையும் எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.