தமிழகத்தில் திறப்புக்கு தயாராகும் பள்ளிகள்!
By Madhalai Aron | Galatta | Sep 24, 2020, 05:07 pm
பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்களாகியுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொது போக்குவரத்துக்கு அனுமதி, இ பாஸ் முறை ரத்து என முக்கிய அறிவிப்புகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியான நிலையில் அடுத்தகட்ட தளர்வுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும் நிறைய தகவல்கள் வெளிவருகின்றன.
ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை படித்துச் செல்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் இந்த முறை நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 22 ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, ``தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு இல்லை” என திட்டவட்டமாக கூறினார்.
மேலும் பேசிய அவர், ``அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் காலி பணியிடங்களை விரைந்து நிரப்பப்படும். இதுவரை 15 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்” என்றும் கூறினார்.
பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்த கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைச்சரின் பேச்சு அமைந்தது.
அமைச்சர் இந்த பேட்டியை அளித்து, இரண்டு நாள்களே ஆகியுள்ள நிலையில், இன்றைய தினம் தமிழக அரசு மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
``* அக்.1ந் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி
* 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்.1ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி.
* அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்.
* பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு மாணவர்கள் வர அனுமதி.
* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே செல்லலாம்.
* ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிகளுக்கு வரவழைக்க அறிவுறுத்தல்
* ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு வரும்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிகளுக்கு மாணவர்களை வர தேவை இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். அதேநேரம் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் குழுக்கள் ஆசிரியர்களை குழுக்களாக பிரித்து வெவ்வேறு நாட்களில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசிரியர் குழுவும் இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கு செல்லலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி பார்த்தால் மாணவர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் வந்தால் போதும் கட்டாயம் கிடையாது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்கள் எப்போது வருகை தருவார்கள் என்று தெரியாததால், ஆசிரியர்கள் கண்டிப்பாக தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு பள்ளிக்கு செல்வது கட்டாயமாகும். போகப் போக நிலைமை எப்படி இருக்கிறது என்று பார்த்து பள்ளிகளுக்கு மாணவர்களை வர சொல்வதை கட்டாயப்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.