``பள்ளிகள் திறப்பு குறித்து, நவம்பர் 12 ல் முதல்வர் அறிவிப்பார்" அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
By Nivetha | Galatta | Nov 10, 2020, 06:02 pm
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டது. பள்ளிகள் திறப்பு நேரத்தில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டும் வருகை புரியலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படத் தொடங்கியிருப்பதாக செய்திகளில் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது மற்ற மாநிலங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. எனவே முன்பை விட மிகவும் கவனத்துடன் மாணவர்களைக் கையாள வேண்டிய சூழலில் இருக்கிறோம். இந்தச் சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி வரும் 9ஆம் தேதி பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் முதல்வர் விரைவாக நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நடப்பாண்டில் 2,505 பள்ளிகளுக்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது பற்றி கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டம், முறையான பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று கருத்து தெரிவிக்கலாம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், `தமிழக மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். ஒருவேளை நடப்பாண்டு பள்ளிகளைத் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டால் பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்' என்று கூறினார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நவம்பர் 12 ஆம் தேதி முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
``பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து நாளை மறுநாளுக்குள் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார். வருகிற 12 ஆம் தேதி முதல்வருடன் ஆலோசித்த பிறகே ஆன்லைன் வகுப்புகள் அல்லது டிவி மூலம் கல்வி வழங்கப்படும்.
பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு யூனிபாஃர்ம், செருப்புகள் தயாராக உள்ளன. நடப்பு ஆண்டில் 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வு பயிற்சி பெற்று வருகின்றனர்" என்றார்.