ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது - பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் தகவல்
By Madhalai Aron | Galatta | Aug 01, 2020, 07:03 pm
தமிழகத்தில் 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த முதல்வர் பழனிசாமி ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார்.
இதன்படி ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதில் தளர்வு, தடை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:
“நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 & 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டுள்ளதுபோன்று ஆகஸ்ட் மாதத்திலும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலாகும் என்பதால் தமிழக மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கான தேவைகளை சனிக்கிழமையன்றே பெற்றுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குறிப்பாக கறி வகைகளான மட்டன் சிக்கன் மற்றும் மீன் கடைகளில் இறைச்சி விற்பனைகள், சனிக்கிழமைகளில் படு ஜோராக நடைபெற்றது. ஞாயிறு லீவு நாளைக்கே லீவு விட்டாலும் கவலையில்லை சனிக்கிழமையன்றே நாங்க ஸ்டாக் வாங்கி வைத்துக்கொள்வோம் என்கின்றனர்.
கறிக்கடைகள் மட்டுமன்றி, அனைத்து வகை வணிக இடங்களும் ஞாயிறன்று மூடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் தற்போது அறிவித்துள்ளது.
கடலூரில் இன்று பேசிய அச்சங்கத்தின் தலைவர் முரளி, நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதேபோல `ஞாயிறு முழு ஊரடங்கின் ஒரு பகுதியாக, அடுத்த மாதத்தில் வரும், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், 'டாஸ்மாக்' மது கடைகள் செயல்படாது என்று நேற்று அறிவிக்கப்பட்டது. இப்போதைக்கு தமிழகத்தில், கொரோனா தொற்று குறைவாக இருக்கும் பகுதிகளில் மட்டும், டாஸ்மாக் மது கடைகள் செயல்படுகின்றன.
வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும் மது கடைகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, 'குடி'மகன்கள், சனிக்கிழமைகளிலேயே அதிக மது வகைகளை வாங்கி வருகின்றனர்.
இப்படி குறிப்பிட்ட ஒருநாள் முழு முடக்கம், கொரோனா பரவலை எப்படிக் கட்டுப்படுத்தும் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதையே வல்லுநர்களும் வேறு விளக்கங்களோடு கூறுகிறார்கள். `ஞாயிற்றுக் கிழமை கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தப்படுகிறது எனக் கூறினால், சனிக்கிழமை நிலைமை தலை கீழாக உள்ளது. காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள், என அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் அதிகளவில் கூட வேண்டிய சூழல் உருவாக்கப்படுகிறது. அது பரவலை அதிகப்படுத்தவே செய்கிறது' என்கிறார்கள் வல்லுநர்கள்.
இருப்பினும், அரசு இந்த முறையை மட்டுமே தொடர்ச்சியாக பின்பற்றுகிறது. தமிழகத்தில்கூட பரவாயில்லை, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள், வாரத்தில் இருநாள் மட்டுமே பொதுமுடக்கம் - பிற நாள்களில் இயல்பு வாழ்வு என்றுதான் இயக்கம் இருக்கிறது.