``பதில் வருவதற்குத் தாமதமானதால் அரசாணை!" - முதல்வர் அறிவிப்பு!
By Nivetha | Galatta | Oct 30, 2020, 02:21 pm
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதித் தீர்வு நீட் கட்டாயமாக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு போதுமான இடங்கள் கிடைப்பதில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வந்தது. இதையடுத்து அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் ஒன்றை இயற்றியது.
அந்தச் சட்டத்துக்கு ஒப்புதலைப் பெறுவதற்காக அதன் கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இந்தச் சட்டம் குறித்து பரிசீலிக்க தனக்கு 3-4 வாரங்கள்வரை தேவை என்றும் ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டு விட்டது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாலும் அரசியல் சாசனத்தின் 162வது பிரிவு அளிக்கும் அதிகாரங்களின்படியும் இந்த உத்தரவை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என அரசாணை தெரிவிக்கிறது.
இந்த இட ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர, சுயநிதிக் கல்லூரிகளில் அரசுப் பிரிவுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் பொருந்தும். இந்த இட ஒதுக்கீடு தவிர, பொதுவான இடங்களுக்கும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் போட்டியிடலாம் என்றும் இந்த அரசாணை தெரிவிக்கிறது.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, "அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்யேகமாக ஒரு உள் ஒதுக்கீடு கொடுக்க வகை செய்யும் சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்றத் தேவைப்படும் அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தொகுத்து, உரிய பரிந்துரையை தமிழ்நாடு அரசுக்கு வழங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும்" என அறிவித்தார்.
ராமநாதபுரத்தில் இன்றைய தினம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் செயல், பலன் அளிக்காது என்று தெரிவித்தார்.
மேலும் பேசியவர், ``ஆளுநரிடம் இருந்து பதில் வருவதற்குத் தாமதம் ஏற்பட்டதால் அரசாணை வெளியிட்டுள்ளோம். ஏழை எளிய மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க இந்த அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த நடப்பாண்டில் ஒதுக்கீடு தருவதற்காகத்தான் அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த இட ஒதுக்கீடு மூலமாக சமூக நீதி பாதுகாக்கப்படும்'' என்றார்.
தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணையை வரவேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு செய்வதில் ஏன் இவ்வளவு நாட்கள் தாமதம் ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
''7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.