தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
By Aruvi | Galatta | Jun 10, 2020, 04:49 pm
2020-21 ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாகத் தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று, மற்ற உலக நாடுகளைப்போல், இந்தியாவிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரும் 30 ஆம் தேதி வரை 5 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், கடந்த 3 மாத ஊரடங்கு காரணமாக, இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால், இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தை, கடந்த மாதம் 5 கட்டங்களாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்திற்கு நிதி போதாது என்றும், கூடுதலாகத் தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்து வந்தது.
இந்நிலையில், 15 வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு 6,157 கோடி ரூபாய் நிதி விடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
அதன்படி, 2020-21 ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாகத் தமிழகத்திற்கு 335 கோடி ரூபாய் விடுவிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருக்கும் மாநிலங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.