“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு திங்கள் கிழமை தான் தெரியும்!” முதலமைச்சர் அறிவிப்பு
By Aruvi | Galatta | Jun 26, 2020, 04:44 pm
“தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு திங்கள் கிழமை தான் தெரியும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில், பள்ளிக்கல்வி, சட்டம், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கென, 25 கோடியே 53 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6 இடங்களில் வகுப்பறை, ஆய்வகம், கழிப்பறை என மொத்தம் 10 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, 3 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில், சட்டக்கல்வித்துறை சார்பில் அரசு சட்டக் கல்லூரியில் ஆயிரத்து 36 சதுர மீட்டர் பரப்பளவிலான புதிய நூலக கட்டடத்தையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
அத்துடன், வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில், 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில், 6 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 125 மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டடத்தையும் இன்று திறந்து வைத்தனர்.
மேலும், கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இயல் கூட்டத்தில், 3 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப் பட்ட செயல் முறை விளக்க அரங்கத்தையும் முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இதனையடுத்து, 81 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குடும்ப நலத்துறைக்கான துணை இயக்குநர் அலுவலக கட்டடம் மற்றும் 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமய புரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, “மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை, தமிழக அரசு சரியாகப் பின்பற்றி வருகிறது” என்று குறிப்பிட்டார்.
“ஊரடங்கால் கொரோனா பாதிப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றும், தமிழகத்தில் இதுவரை 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர்” என்றும் அவர் கூறினார்.
“கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும், ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் பெருமையோடு கூறினார்.
“திருச்சியில் நவீன உணவுப் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் 200 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.
மேலும், “அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா உயிர்ச் சேதம் முற்றிலும் குறைக்கப் பட்டுள்ளதாகவும், கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
குறிப்பாக, “வல்லரசு நாடுகளே கொரோனவை கட்டுப் படுத்த திணறி வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
அத்துடன், “தமிழகத்தில் பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பது குறித்து, ஜூன் 29 தேதி காலை 10 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றும், மருத்துவக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு தான் முடிவு எடுக்கப்படும்” என்றும் கூறினர்.
“வல்லுநர்களுடனான ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவிப்பைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
“குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு 498 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், நபார்டு வங்கி நிதி உதவியுடன் பல்வேறு நீர் பாசனத் திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ரூ.495 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றும் முதலமைச்சர் கூறினார்.
மேலும், “மணப்பாறை காகித நிறுவனத்தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், முதல்கட்டமாக 400 மெட்ரிக் டன் காகிதக் கூழ் தயாரிக்கப்படும் என்றும், இதன் காரணமாகத் திருச்சி மாவட்டத்துக்கு இந்த தொழில் வளர்ச்சி பணிகள் வரப்பிரசாதம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.
“தொழில் முனைவோருக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க மத்திய அரசிடம் கோரிக்கைகளை வைத்துள்ளோம் என்றும், இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 10 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும், இதனையடுத்து, தொழில் துறையினரின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.
“தொழிற் சாலைகள் மூடப்பட்டு உள்ளதால் அரசுக்கு வருவாய் குறைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், ஜி.எஸ்.டி. வருவாய் உட்பட 2 மாத காலமாக அரசுக்கு எந்த வருமானமும் இல்லை என்றும் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, மாதம் ரூ.12,000 - ரூ.13,000 கோடி இழப்பு ஏற்படும் எனவும், மொத்தம் சுமார் ரூ.85,000 கோடி இழப்பு ஏற்படலாம் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக” குறிப்பிட்டார்.
“இதனால் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, திருச்சி முக்கொம்பில் குடிமராமத்து பணிகளை நடைபெற்று வருவதை முதலமைச்சர் பழனிசாமி, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.