அரசு பள்ளிகளில் எல்கேஜி - யுகேஜி வகுப்புகள் மூடல்!
“எல்கேஜி - யுகேஜி வகுப்புகள் வரும் கல்வி ஆண்டு முதல் மூடப்படுவதாக” பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் #LKG #UKG வகுப்புகள் கொண்டுவரப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கியது.
அதன் படி, சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு, அங்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த செயலுக்கு, பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
அந்த வகையில், கடந்த 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று LKG, UKG வகுப்புகள் முறைப்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தன.
இந்த புதிய திட்டமானது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெற்றோர் மத்தியில் வெகுவான பாராட்டையும், வரவேற்பைப் பெற்றது. அத்துடன், இங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்டவைகளும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதுவும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த சூழலில் தான், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் தாக்க தொடங்கியதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக #LKG #UKG வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன.
இந்த நிலையில் தான், தமிழக அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு பதிலாக தமிழக சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தப்படும் என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன், இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும், கூறப்படுகிறது.
மேலும், ஏற்கனவே அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அதனை தற்போது இன்னும் முறைப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதன்படியே தற்போது மீண்டும் சமூகநலத் துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் புதிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனிடையே, பள்ளிக் கல்வித் துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இனி வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அப்படியே வெகுவாக குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக, மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி அதிக கட்டணங்களைச் செலுத்தி குழந்தைகளை சேரக்கூடிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டு உள்ளதாகவும், விமர்சனங்கள் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.