தமிழகத்தின் 38 வது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை! முதலமைச்சரை சந்திக்கிறார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
By Aruvi | Galatta | Dec 28, 2020, 12:12 pm
இன்றைய தினம் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறையை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டசபையில் தமிழக அரசு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்தது. ஆனால், அதன் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக 8 மாதத்திற்கும் மேலாக அப்பகுதி மக்கள் காத்திருந்து வந்தனர்.
இந்த சூழலில், “சட்டசபையில் அறிவிக்கப்பட்டும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தனி மாவட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உருவாகி உள்ளது. புதிய மாவட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இதன் மூலம், மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியது.
அதே நேரத்தில், 38 வது மாவட்டமாக மயிலாடுதுறையை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்த பிறகு, சக அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.
குறிப்பாக, உலகம் முழுவதும் புதிதாக பரவி வரும் புது வகை கொரோனா தொற்று பரவல் அச்சம் எழுந்துள்ள இந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவானது,
படிப்படியாக மாதம் தோறும் பல கட்ட தளர்வுகளுடன் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தாலும் மருத்துவ கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் ஆகியவை திறக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், சிறுவர் சிறுமியர்கள் பயிலும் பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரவே செய்கின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து புதிய வகை கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதனால், தமிழக்தில் அதன் தாக்கம் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றி அவர் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக, புதிய தளர்வுகளுடன் கூடிய பொது ஊரடங்கு மேலும் நீடிக்கும் என்ற அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக” கூறினார். அத்துடன், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்று பிற்பகல் 1 மணி மேல் முதலமைச்சருடன் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.