மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்
By Nivetha | Galatta | Nov 11, 2020, 06:27 pm
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டம், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்விற்காக மூன்று முறை முதல்வரின் வருகை ரத்து செய்யப்பட்டு, நான்காவது முறையாக நடந்தது. முதல் முறை பிரதமர் மோடியுடன் அனைத்து மாநில முதல்வர்களுடனான காணொலிக்கூட்ட நிகழ்ச்சியாலும், இரண்டாவதுமுறை முதல்வரின் தயாரின் மறைவினாலும், மூன்றாவது முறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகளில் ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைத்தார் முதல்வர். பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 15,792 பயனாளிகளுக்கு ரூ.37.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் முதல்வரின் வருகைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று இரவில் சில இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், "துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வரவில்லை. சாத்தான்குளத்தில் போலீஸாரின் சித்ரவதையால் தந்தை, மகன் உயிரிழந்தபோதும் வரவில்லை, சொக்கன்குடியிருப்பில் படுகொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு அரசு நிதி அளிப்பதாக வாக்குறுதி அளித்து இன்று வரை நிறைவேற்றவில்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு தூத்துக்குடிக்கு வருகிறீர்கள்?" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இரவில் சில இடங்களில்ஒட்டிய போஸ்டர்களை இரவோடு இரவாக போலீஸாரே கிழித்ததுடன் மீதி போஸ்டர்களையும் கைப்பற்றி தீயிட்டு கொளுத்தினர். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால் சமூக வளைதளங்களிலும் அதனை பரப்பினார்கள் உடன்பிறப்புகள்.
இப்படியான சூழலில், பரபரப்புக்கு மத்தியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கருவியை துவக்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி. இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பிய போது தெற்கு காவல்நிலையம் அருகில் மாரீஸ்வரி என்னும் மாற்றுத்திறனாளி பெண் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் காரை நிறுத்தி அருகில் அழைத்தார் முதல்வர் பழனிச்சாமி. மாரீஸ்வரியின் கணவர் சின்னத்துரை, மாரீஸ்வரியை தூக்கிக் கொண்டு முதல்வரின் காரின் அருகில் சென்றார். “என்னம்மா” என முதல்வர் கேட்க, “அய்யா, என்னோட பேரு மாரீஸ்வரி. நான் எம்.ஏ தமிழ், டைப்பிங் ஹையர், லோயர் முடிச்சிருக்கேன். என்னோட கணவர் சின்னத்துரை கூலித் தொழிலாளி. எனக்கு அஞ்சு வயசுல சாலினின்னு பெண் குழந்தை இருக்கு. ரொம்ப கஷ்டமான சூழ்நிலையிலதான் வாழ்கை நடத்திட்டு வர்றோம். எனக்கு ஏதாவது ஒரு வேலை வேணும்” என சொல்லி கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவை கொடுத்தார்.
அந்த மனுவைப் பெற்ற முதல்வர், “நீ கலெக்டர் ஆபிஸுக்கு வாம்மா” எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த மாரீஸ்வரியை அழைத்து சுகாதாரத்துறையின் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வார்டு மேலாளர் பணி நியமன ஆணையை வழங்கினார். ”இந்த வேலையின் மூலம் மாத ஊதியமாக ரூ.15,000 கிடைக்கும். குடும்பத்தை நல்லா பார்த்துக்கோம்மா” என்றார் முதல்வர். பி.ஆர்.ஓ., சீனிவாசன், மாரீஸ்வரியை மீடியாக்களிடம் அழைத்துக் கொண்டு மனு கொடுத்த 2 மணி நேரத்தில் வேலை கொடுக்கப்பட்டதை தெரியப்படுத்தினார். இதே மாரீஸ்வரி, வேலை கேட்டு மக்கள் குறைதீர் கூட்டத்திலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்திலும் பலமுறை மனு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வரலாற்றில் மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை கிடைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் முதல்வரின் சுறுசுறுப்பான நடவடிக்கைகளுக்கு அந்த பெண் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.