நடிகர் விவேக் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலத்தி வருகின்றனர்.

மறைந்த நடிகர் விவேக் உடலானது, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது இறப்புக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் பழனிசாமி

நடிகர் விவேக் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். திரைப்படங்களில் இவரது நடிப்பு சிரிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்தது. விவேக் அவர்கள், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு. பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில் அரசிற்குஉறுதுணையாக திகழ்ந்தவர். அதுமட்டுமின்றி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் “கிரீன் கலாம்” என்ற அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு, அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர்.

கலைத்துறையில் இவருடைய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால் வழங்கப்படும் கலைவாணர் விருது மற்றும் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்ற சிறப்புக்குரியவர். தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த திரு. விவேக் அவர்களின் மறைவு, தமிழ் திரைப்படத் துறைக்கும், ரசிக பெருமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.

ஓ.பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பியவர் நடிகர் விவேக். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர் நடிகர் விவேக்.

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்

நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!

வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக

பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை நெஞ்சில் தேக்கி, அதைத் திரைப்படங்களில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர், நடிகர் விவேக் நடிப்பை தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தியவர்.

டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அமமுக

சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார். சனங்களின் கலைஞன் எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும்.

எல்.முருகன், பாஜக மாநில தலைவர்

நடிகர் விவேக் இடத்தை சமூகத்திலும் சரி, திரையுலகிலும் சரி ஈடு செய்வது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது.

ராமதாஸ், பாமக நிறுவனர்

தமிழ் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர்.

திருமாவளவன், விசிக

விவேக் மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது, இதனை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி.

பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்

நகைச்சுவையால் மக்களை சிந்திக்க வைக்க முடியும் என்பதை நிகழ்த்திக்காட்டிய பெருமை அவரைச் சேரும். இவ்வளவு சீக்கரத்தில் மரணமடைவார் என்று எதிர்ப்பர்க்கவில்லை.

பொன்ராஜ்

மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திறைமைசாலியை இழந்துள்ளோம். 

சுப.வீரபாண்டியன்

பகுத்தறிவு கருத்துக்களை பரப்பி வந்த சின்ன கலைவாணர் விவேக் மரணம் வேதனை தருகிறது.

தமிழிசை செளந்தரராஜ, புதுச்சேரி துணைநிலை ஆளுநர்

தனது நகைச்சுவையால் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றவர். பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களை பாதுகாத்தவர் விவேக். 

நடிகர் விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடலானது, இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படும் என்று, அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்து உள்ளனர்.