இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்
By Nivetha | Galatta | Sep 23, 2020, 01:44 pm
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்யியில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இதே அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த இவர் தற்போது தனது பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில், இவருக்கு தனது சொந்த ஊரான கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதியில் சொந்த நிலம் மற்றும் வீடு உள்ளது.
இவர்களில், பாலசுப்பிரமணியன் தனக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு, கடன் பெறுவதற்காக அவர் பகுதியின் அந்த வங்கிக்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் கிளை மேலாளர் விஷாலை சந்தித்து, ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காட்டி கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது வங்கி மேலாளர், பாலசுப்பிரமணியனிடம் ஆங்கிலத்தில், ``உங்களுக்கு இந்தி தெரியுமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு பாலசுப்பிரமணியன் ஆங்கிலத்தில் ``எனக்கு இந்தி தெரியாது. ஆனால் ஆங்கிலமும் தமிழும் நன்கு தெரியும்" என பதிலளித்துள்ளார். அதற்கு மேலாளர், தாம் மகாராஷ்டிராவில் இருந்து வருவதாகவும் தமக்கு இந்தி மட்டுமே தெரியும் எனக் கூறி ஆவணங்களைப் பார்க்காமல் இருந்துள்ளார். பாலசுப்பிரமணியம் மேற்கொண்டு தனது ஆவணங்களைக் காட்டிய போதும் அவற்றை பாராமல் மொழி பற்றியே பேசி, ``இந்தி தெரியாத உங்களுக்கு கடன் கொடுக்க முடியாது" எனத் திரும்ப திரும்ப சொல்லி உள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் பாலசுப்பிரமணியன், மான நஷ்டஈடு கேட்டு வங்கி கிளை மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கி கிளை மேலாளர் விஷாலுக்கு, திருச்சிக்கு இடமாற்றம் செய்து திருச்சி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
செய்தி அறிந்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உடனே வங்கி மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஆணையிட்டார். இதையடுத்து கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக, ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில், கழக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் முன்னிலையில் வங்கி மேலாளரின் இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்தும், அவரை உடனே இடம் மாற்றம் செய்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அந்த மருத்துவர் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையே ஜெயங்கொண்டத்தில் டாக்டர் பாலசுப்பிரமணியன் நடத்தி வரும் கிளினிக்கிற்கு, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ``தன்னை ஒரு முதியவர் என்றும் பாராமல், அமரவும் சொல்லாமல் அலட்சியமாக வங்கி கிளை மேலாளர் செயல்பட்டார். அந்த பகுதியில் படிக்காத விவசாயிகள் உள்ளிட்ட பலர் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். என்னை போன்று அவர்களை கிளை மேலாளர் அலட்சியப்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம். அவரை பணியிட மாற்றம் செய்ததில் எனக்கு உடன்பாடு கிடையாது" என்று தெரிவித்துள்ளார். வங்கி மேலாளர் மீது மேலும் சில வாடிக்கையாளர்களும் புகார் தெரிவித்து உள்ளனர்.