“ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும்!” முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்
By Aruvi | Galatta | Mar 24, 2021, 01:42 pm
“திமுக தலைவர் ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும், ஒரு போதும் முதலமைச்சராக முடியாது” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கரூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, கரூர் - அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், “திமுகவில் இருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சின்ன சாமியை வரவேற்று” பேசினார்.
“திமுகவில் உழைப்புக்கோ, தியாகத்திற்கோ இடம் கிடையாது என்றும், திமுக குடும்ப கட்சி, கார்ப்பரேட் கட்சி, யார் வேண்டுமானாலும் பங்கு செலுத்தலாம்” என்றும், விமர்சித்தார்.
“திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் தொழில் வளம் சிறக்கத் தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு தான்” என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, “திமுக தலைவர் ஸ்டாலினால் கனவு மட்டுமே காண முடியும் என்றும், ஒரு போதும் அவரால் முதலமைச்சராக முடியாது” என்றும், எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
“எம்.ஜி.ஆர் தோற்று வித்த இயக்கத்தை இமைபோல காத்தவர் தான் ஜெயலலிதா என்றும், தலைவர்கள் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் நான் என்றும், இங்கு மக்கள் தான் முதலமைச்சர்” என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முன்னதாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும், சேலத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் திடீரென்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனையானது சுமார் பத்து நிமிடங்கள் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது.
முக்கியமாக, “தேர்தல் சுற்றுப் பயணம் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும்” இருவரும் சிறிது நேரம் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பிறகே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் சுற்றுப்பயணம் சென்று, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.