“பலாத்காரம் செய்ய வந்ததால் கொலை செய்தேன்” என்று பெண் கூறிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

அதாவது, கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் 25 வயதான அஜித், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் பெண்ணான 19 வயதான இளம் பெண் கௌதமி மீது ஆசைப்பட்டு உள்ளார் என்றும், இந்த ஆசை நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அது ஒரு கட்டத்திற்கு மேல் சபலமாக மாறி அந்த பெண்ணை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில், அப்போது இரவு நேரத்தில், கௌதமி வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அந்த பெண் மட்டும் தனிமையில் இருந்த போது கௌதமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார் என்று கூறப்பட்டது. 

அப்போது, அஜித் தனது உறவினர் என்பதால், அவரை முதலில் எச்சரித்து வெளியே போகும் படி கூறியதாகவும், அதன் பின் அந்த இளம் பெண் சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்த போது, தான் கொண்டு வந்த வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, கௌதமியிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும், அப்போது கடும் அதிர்ச்சியடைந்த கௌதமி, என்ன செய்வது என்று தெரியாமல் அஜித்திடம் இருந்த தன்னை தற்காத்துக் கொள்வதற்காக, அவனிடமிருந்து கத்தியைப் பிடுங்கி அவரை சரமாரியாகக் குத்தியதாகவும் கூறப்பட்டது. 

இதில், அஜித்திற்கு அதிக அளவிலான ரத்தம் வந்துள்ளது. இதனால், ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், காலையில் விடிந்ததும் அங்குள்ள சோழவரம் காவல் நிலையத்திற்குச் சென்ற இளம் பெண் கௌதமி, தனக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் பலாத்கார முயற்சி சம்பவத்தைக் கூறி, அந்த இளைஞனை கத்தியால் குத்தியது குறித்தும், அதில் அவன் உயிரிழந்ததையும் கூறி சரண் அடைந்து உள்ளார். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த பெண் உடன் அவரது வீட்டிற்குச் சென்று, உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சோழவரம் காவல் துறையினர், சம்மந்தப்பட்ட இளம் பெண்ணின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், “இளைஞன் அஜித் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? பாலியல் பலாத்கார முயற்சியின் போது நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?” என்பது குறித்து பல்வேறு கோணங்களில் சோழவரம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பாலியல் பலாத்கார முயற்சியின் போது நடந்த கொலை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர். அப்போது, இளம் பெண்ணிடம் நீதிபதி விசாரித்தார்.

அதன் தொடர்ச்சியாக, “கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்திக் கொன்ற இளம் பெண்ணை IPC 106-ன் படி, தற்காப்புக்காகச் செய்த கொலை என்ற அடிப்படையில் அவரை கைது செய்யும் நடவடிக்கை கை விடப்பட்டு விடுதலை செய்வதாக” நீதிபதி தெரிவித்தார். இதனையடுத்து, அந்த இளம் பெண் விடுதலை செய்யப்பட்டார். 

ஆனால், அந்த வழக்கில் திடீர் திருப்பமாக “எனது கணவரை கௌதமி திட்டம் போட்டு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து உள்ளார்” என்று, அஜித்தின் மனைவி சிவன்யா மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.

அந்த மனுவில், “கௌதமி தனது வாழ்க்கையில் பெண் என்ற பண்பாட்டு நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தவர் என்றும், திருநங்கை போல் இவர் திருநம்பியாக வலம் வந்தார் என்றும், குறிப்பிடப்பட்டு உள்ள “கௌதமிக்கு ஆண்களை விட பெண்களையே அதிகமாகப் பிடிக்கும் என்றும், அஜித்தின் தூரத்து உறவினர் என்பதால் அஜித்தின் மனைவி சுகன்யாவிடமும் நெருக்கமாகப் பழகி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் சுகன்யாவிடம் அஜித்தைவிட்டு விலகி என்னுடன் வந்து விடு, நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்றும், அப்படி இல்லை என்றால் உன்னை அஜித்துடன் வாழ விடமாட்டேன் என்று பல முறை பிரச்சனை செய்ததாகவும்” அதில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், “ இந்த நோக்கத்தில் தான் அஜித்தை கடந்த 2 ஆம் தேதி தனியாக வரவழைத்துத் திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு, அஜீத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்தார் என்ற பொய்யான வாக்குமூலத்தை அளித்து உள்ளார் என்றும், இது குறித்து காவல் துறையினர் சரியாக விசாரணை செய்யாமல் உடனடியாக அவரை விடுவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர்” என்றும், அதில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

அதே நேரத்தில், “தற்போது, கௌதமியால் எனக்கு ஆபத்து உள்ளதாகவும், அவரிடம் இருந்து காவல் துறையினர் எனக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை முதலில் இருந்து முறையாக மீண்டும் விசாரித்தால் மட்டும் தான் அவருடன் சேர்ந்து வேறு சில நபர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்றும், பாதிக்கப்பட்டுள்ள சுகன்யா புகாரில் தெரிவித்து உள்ளார். இதனால், போலீசாரும் ஊர் மக்களும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.