டிக்டாக் நட்பால் மலர்ந்த காதலால் 16 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். தற்போது, கொரோனா தொற்று நோய் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அந்த சிறுமி, வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே பள்ளி செல்லும் போதே டிக்டாக்கிற்கு அடிமையான அந்த சிறுமி, நிறைய வீடியோக்களை பார்த்து ரசித்து, அதற்கு தன்னுடைய கருத்தையும் பதிலாக அளித்து வந்தார். அப்போது, அவ்வப்போது சில வீடியோக்களையும் இந்த சிறுமி செய்து, தன்னுடைய டிக்டாக் கணக்கில் பதிவு செய்துள்ளார். இப்படியாக டிக்டாக்கிலேயே அந்த சிறுமி மூழ்கி இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்து உள்ள பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த 21 வயதான வெங்கடேசன், என்ற இளைஞரும் டிக்டாக்கில் மூழ்கியே இருந்துள்ளார்.

அப்போது, அந்த 16 வயது சிறுமியும் - வெங்கடேசனும் டிக்டாக்கில் அறிமுகமாகி நட்பாகி உள்ளனர். நாளடைவில், அந்த நட்பு அவர்களுக்குள் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருவருடத்தில் எழுந்ததாகத் தெரிகிறது. ஆனாலும், தற்போது ஊரடங்கு காரணமாக, அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் இருந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில், 6 ஆம் தேதி அன்று அந்த 16 வயது சிறுமி வீட்டிலிருந்து மாயமாகி உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அந்த ஊர் முழுவதும் தேடி உள்ளனர். அத்துடன், சிறுமியின் சக தோழிகள் வீட்டிற்குச் சென்றும், அவர்கள் தேடிப் பார்த்துள்ளனர். 

ஆனால், எங்குத் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர், அங்குள்ள மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான சிறுமியைத் தேடி வந்ததுடன், விசாரணையும் மேற்கொண்டு வந்தனர்.

அப்போது, சிறுமியின் காதல் விவகாரம் போலீசாருக்குத் தெரிய வந்தது. மேலும், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மயிலாடுதுறைக்கு வந்து அந்த சிறுமியைக் கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, சிறுமியை ஏமாற்றிக் கடத்தியதாக இளைஞர்கள் மீது அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வந்தார்.

அதேபோல், வெங்கடேசன் பயன்படுத்திய செல்போன் எண்ணையும் போலீசார் டிராக் செய்தனர். அதன்படி, வெங்கடேசன் அரக்கோணத்தில் இருப்பது தெரிய 
வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அரக்கோணத்தில் வைத்து சிறுமியை போலீசார் பத்திரமாக மீட்டனர். 

ஆனால், சிறுமியை கடத்திச் சென்ற சஞ்சய் குமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் அங்கு இல்லை. அவர்கள் இருவரும் போலீசார் வருவதைத் தெரிந்துகொண்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. இதனால், தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், வெங்கடேசன் உடன் வந்த அவரது நண்பன் சஞ்சய் குமாரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவனை நீதிமன்றத்தில் ஆஜர் 
படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வெங்கடேசனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு 
ஏற்பட்டது.