சாதிய கருத்து.. போலீஸ் கவனிப்பு.. டிக்டாக்கை விட்டு வெளியேறும் ஜி.பி முத்து..!
By Aruvi | Galatta | Jun 18, 2020, 01:10 pm
மகளை வைத்து டிக்டாக்கில் சாதிய கருத்து கூறிய ஜி.பி முத்துவை போலீஸ் வசமாகக் கவனித்ததால், டிக்டாக்கைவிட்டே செல்வதாக அவர் கூறியுள்ளார்.
டிக்டாக் பார்ப்பவர்கள் கண்டிப்பாக ஜி.பி முத்துவை தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு டிக்டாக்கில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து.
டிக்டாக்கில் தனது ஏரியா வட்டார மொழியில் பேசுவதும், அதுவும் எதிர்மறையான கருத்துக்களைக் கூறியுமே பிரபலமடைந்தார் ஜி.பி முத்து.
இதனிடையே, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி முத்து, தான் இதற்கு முன்பு செய்த மரக்கடை வேலையை விட்டுவிட்ட, டிக்டாக்கில் வீடியோ செய்வதையே, அதுவும் ஊர் ஊராகச் சென்று வீடியோ செய்வதையே தன்னுடைய வேலையாக மாற்றிக்கொண்டார்.
இதனால், ஜி.பி முத்து குடும்பத்தில் பிரச்சனை வெடித்ததாகவும், அப்போது தன்னை “டிக்டாக் பைத்தியம்” என்று தனது மகள், மனைவி உட்பட பலரும் விமர்சிப்பதாகவும், அவரே வீடியோவும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், கடைசியாக ஜி.பி முத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தனது மகளை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து, அதில் ஒரு குறிப்பிட்ட சாதி பிரிவினரை வசைபாடியிருக்கிறார்.
இந்த வீடியோ பரவிய நிலையில், மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த வினோ என்பவர், முதலமைச்சரின் தனிபிரிவுக்கு ஜி.பி முத்து பற்றி புகார் மனு அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து, குலசேகரப்பட்டினம் போலீசார் நேற்று ஜி.பி முத்துவை தேடிச் சென்ற நிலையில், அவர் மரக்கடையில் அமர்ந்து டிக்டாக் வீடியோ ஒன்று செய்துகொண்டிருந்தார். அப்போது, அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று வசமாகக் கவனித்துள்ளனர்.
அப்போது, அவரிடம் நடத்திய விசாரணையில், “எந்தவித உள்நோக்கமும் இன்றி, தான் அப்படி பேசிவிட்டதாகவும், இனிமேல் எந்த வீடியோவும் டிக்டாக்கில் நான் பதிவேற்ற மாட்டேன்” என்றும் அவர் எழுதிக் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஜி.பி முத்துவின் குடும்ப சூழல் கருதி, போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இதனிடையே, மகளை வைத்து டிக்டாக்கில் சாதிய கருத்து கூறிய ஜி.பி முத்துவை போலீஸ் வசமாகக் கவனித்ததால், டிக்டாக்கைவிட்டே அவர் செல்வதாகச் செய்திகள் வைரலாகி வருகிறது.