``தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகள்!" - தொல். திருமாவளவன்
By Nivetha | Galatta | Nov 30, 2020, 04:56 pm
```எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' திட்டத்தைக் கைவிடுவது மனுஸ்மிருதியை மறைமுகமாக நடைமுறைப் படுத்தும் முயற்சி" என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
``புரட்சியாளர் அம்பேத்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் போராடிப்பெற்ற கல்வி உதவித்தொகைத் திட்டமான ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிடுவது என்று மோடி அரசு முடிவு செய்துள்ளது. இது எஸ்சி/ எஸ்டி மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மறைமுகமாகத் தடுக்கும் சதியாகும்.
மோடி அரசின் சதியிலிருந்து இச்சமூகங்களின் மாணவர்களைக் காக்கும்வகையில், பல மாநில அரசுகள் தமது மாநில அரசின் நிதியிலிருந்தே அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று அறிவித்துள்ளன. ஆனால், தமிழக அரசு மோடி அரசோடு சேர்ந்து கொண்டு, இதுவரை அந்தத் திட்டத்துக்கு மாநில அரசு வழங்கிவந்த குறைந்தபட்ச நிதியையும் குறைத்துவிட்டது.
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிரான மைய- மாநில அரசுகளின் இந்தப் போக்குகளை விசிக மிக வன்மையாக க் கண்டிக்கிறது.
மைய அரசு இந்தச் சதித் திட்டத்தைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தும் அதேவேளையில், தமிழக அரசு தமது நிதியிலிருந்து எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்குத் தொடர்ந்து கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்குப் பள்ளிப் படிப்புக்குமேல் படிப்பதற்கு உதவியாக ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ என்ற திட்டம் புரட்சியாளர் அம்பேத்கரின் வேண்டுகோளின்படி பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1946-இல் உருவாக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலும் அந்தத் திட்டம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர், ஓபிசி மற்றும் சிறுபான்மையின சமூக மாணவர்களுக்கும் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இப்பொழுது நடைமுறையில் இருக்கும் கல்வி உதவிதொகைத் திட்டங்கள் அனைத்தையும் முற்றாக ஒழித்துவிட்டு புதிய திட்டம் ஒன்றை உருவாக்குவது என மோடி அரசு முடிவு செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினரையும் சேர்த்து அனைத்துத் தரப்பினருக்கும் ஒரே அளவுகோலின்படி கல்வி உதவித்தொகை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஒட்டுமொத்தத் திட்டத்துக்கும் வெறும் 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. இது எஸ்சி / எஸ்டி மாணவர்களுடைய உயர் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 லட்சம் எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஊடகங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மோடி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததிலிருந்தே போஸ்ட் மெட்ரிக் ஸ்காலஷிப் திட்டத்துக்காக நிதி ஒதுக்கீட்டைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்தது. 2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்'புக்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் சந்தித்து இந்த திட்டத்தை மாநில நிதியிலிருந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால், மோடி அரசு 2018 ஆம் ஆண்டில் இந்த கல்வி உதவி தொகை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட 6,000 கோடி ரூபாயை 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 3,000 கோடி ரூபாயாகக்- பாதியாகக் குறைந்துவிட்டது. அதனால் எஸ்சி /எஸ்டி மாணவர்கள் இலட்சக்கணக்கானோர் கல்வி உதவித் தொகையைப் பெற முடியாமல் தமது படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்திலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தினோம்.
அத்துடன், மாநில அரசுக்கும் தொடர்ந்து இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் இவை எவற்றையும் பாஜக அரசும் பொருட்படுத்தவில்லை; அதிமுக அரசும் கண்டுகொள்ளவில்லை.
இப்போது எஸ்சி / எஸ்டி; ஓபிசி மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித்தொகை திட்டங்களையும் ஒழித்துக் கட்டிவிட்டு ஒரே திட்டமாக உருவாக்கி அதில் புதிதாக 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள உயர் சாதியினரையும் சேர்த்து மிகக் குறைந்த அளவுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்து மோடி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கும்கூட தகுதித்தேர்வு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் எஸ்சி/ எஸ்டி மாணவர்கள் இனிமேல் உயர்கல்வி வாய்ப்பை முற்றாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விடுதியில் தங்கிப் படிக்கும் எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த விடுதி உதவித்தொகை நிறுத்தப்படுவதால், அவர்கள் அந்த கட்டணத்தைச் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். இப்பொழுதே எஸ்சி எஸ்டி, ஓபிசி மாணவர்களிடையே பல்வேறு சமூகக் காரணங்களால், படிப்பைத் தொடர இயலாதநிலையில் 'இடைநிறுத்தம்' எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனவே, இந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டால், மேலும் அவர்கள் கல்வி பெறுவதிலிருந்து விரட்டப்படும் நிலை ஏற்படும்.
இது சூத்திரர்கள் மற்றும் சாதியற்ற- வர்ணமற்ற பஞ்சமர்கள் கல்வி பெறவே கூடாது என்று கூறும் மனுஸ்மிருதியை மீண்டும் மறைமுகமாக நடைமுறைப் படுத்தும் முயற்சியே ஆகும்.
எனவே, இது எஸ்சி/ எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்கள் படிக்கக்கூடாது என்னும் மோடி அரசின் சதித்திட்டமே ஆகும். இந்நிலையில், போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கைவிடக்கூடாது என மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
ஒருவேளை போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கு தற்போது மத்திய அரசு அளித்து வரும் நிதி உதவி தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டாலும், பிற மாநிலங்களைப் போல, மாநில அரசு அதைத் தொடர்ந்து வழங்கும் என்று தமிழக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இந்நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக மைய- மாநில அரசுகளின் தற்போதைய போக்குகளைக் கண்டிக்கும் வகையில், விசிக சார்பில் இணையவழி கருத்தமர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்படுகிறது. டிசம்பர் 1 காலை 11 மணிக்கு 'சூம்' வழி நடைபெறும் இந்நிகழ்வில் மேனாள் துணைவேந்தர் முனைவர் வே.வசந்திதேவி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் 07-12-2020 திங்கள் கிழமை அன்று மாவட்டத் தலைநகரங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி விசிகசார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்"
என்று குறிப்பிட்டுள்ளார்.