“இந்துக்கள் இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம்” - இந்து முன்னணி போஸ்டரால் வெடித்தது சர்ச்சை..
By Aruvi | Galatta | Nov 08, 2020, 03:20 pm
“இந்துக்கள் இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம்” என்று, மதப்பற்றை, தீவிரவாத மனப்பான்மேயாடு இந்து முன்னணி தற்போது ஒட்டி உள்ள போஸ்டரால் புதிய சர்ச்சைகள் வெடித்து உள்ளன.
இந்தியா, அமைதியை விரும்பும் ஒரு ஜனநாய நாடு. மத சார்பற்ற நாடு. இங்கு பல மதங்கள், மொழிகள், இனங்கள் என்று, வேற்றுமை மறந்து மதங்கள் கடந்து, நல்லிணக்கத்தோடு காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நல்லிணக்கத்தை வலியுறுத்தியே பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மரபுகள் அனைத்து கடந்த சில காலங்களாக அரசியல் கொள்கைகளுக்காக மீறப்பட்டு வருகிறதோ என்று ஐயப்படும் அளவுக்கு, கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அது தொடர்பான சம்பங்கள் நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டும் தான் இருக்கின்றன. அதற்கு சாட்சியாகத் திகழ்கிறது தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி ஒட்டி உள்ள இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட்” திட்டத்தை நாடு முழுவதும் சமீபத்தில் அமல்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக, அக்கட்சியைச் சேர்ந்த சிலர், “ஒரே இனம், ஒரே மொழி” என்று கருத்துக்கள் கூறி சர்ச்சைகளில் சிக்கியதாகக் கடந்த காலங்களில் செய்திகளும் வெளியானது. அதே போல், மாநில மொழிகளை இழிவுபடுத்தும் விதமாக, இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், அது தொடர்பாகப் பிரச்சனைகள் எழும் போது, பிறகு பின் வாங்குவதும் கடந்த காலங்களில் தமிழகம் கண்ட நிகழ்வுகள்.
ஆனால், தற்போது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் வகையில், இந்து முன்னணியின் பெயரில் ஒரு அபத்தமான போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது. அது தொடர்பான கண்டனங்களும் தமிழகம் முழுவதும் தற்போது எழத் தொடங்கி உள்ளது.
நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தான், தற்போது சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
இந்து முன்னணி சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், “இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!” என்று தலைப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன், “இந்துக்கள் அனைவரும் இந்த தீபாவளி பண்டிகை முதல் இந்து கடைகளிலேயே பொருட்களை வாங்குவோம். நலிவடைந்து வரும் இந்து வியாபாரிகளை ஊக்குவிப்போம். அந்நிய பொருட்களைத் தவிர்ப்போம்” என்று, அச்சிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டரை பார்த்த பலரும் பொங்கி எழுந்தனர். அமைதியாக இருக்கும் தமிழகத்தை, ரத்த பூமியாக மாற்ற இப்படியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர். இந்த போஸ்டர் விவகாரம், அந்த பகுதியின் காவல் துறையின் கவனத்திற்கு சென்றது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்கும் வகையில், கண்ணில் படும் போஸ்டர்கள் எல்லாவற்றையும் கிழித்து எறிந்தனர்.
மேலும், இதே போல் சுமார் 100 க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் தேனி மாவட்டம் உத்தம பாளையம் வடக்குத் தெரு, தேரடி, மெயின் பஜார், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ளது.
இதனை அறிந்த உத்தம பாளையம் காவல் துறையினர் இரவோடு இரவாக போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.
அத்துடன், இது தொடர்பாக உத்தம பாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம் செல்வா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பண்டிகை காலங்களில் சந்தர்ப்பவாதிகள் சிலர் மதக்கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவது, தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள சக வியாபாரிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும், பீதியும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.