“அதிமுகவை சசிகலா விரைவில் கைப்பற்றுவார்.. ஓபிஎஸ் - இபிஎஸ் மோடியை சந்தித்தமைக்கு காரணமும் உண்டு!” - தங்க தமிழ்செல்வன்
“அதிமுகவை வழி நடத்தத் தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், அதிமுகவை சசிகலா விரைவில்
கைப்பற்றுவார்” என்றும், திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சந்தித்துவிட்டு தமிழகம் திரும்பினார்கள். அது முதல் அதிமுக தொடர்பாக பல்வேறு தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில், தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், “கடந்த 10 ஆண்டு காலமாக ஓ. பன்னீர்செல்வம் போடி நாயக்கனூர் தொகுதிக்குச் செய்யாத திட்டங்களை தற்போது பொது மக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர் என்றும், அதனால் நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறேன்” என்றும், அவர் குறிப்பிட்டார்.
ஆனால், “இது குறித்து, நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்குத் தகுதி இல்லை” என்றும், அவர் காட்டமாகப் பேசினார்.
அத்துடன், “அதிமுக வை வழி நடத்த தெரியாமல் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று, கவலைத் தெரிவித்தார்.
“ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருமே, தங்களது சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக் கொள்ளத் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்கள்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “சசிகலா, தனிப்பட்ட குடும்பம் இன்றைக்கு அதிமுகவை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார் என்றும், ஆனால் விரைவில் சசிகலா அதிமுகவை நிச்சயமாகக் கைப்பற்றுவார்” என்றும், தங்க தமிழ்செல்வன் உறுதிப்படத் தெரிவித்தார்.
குறிப்பாக, “ஜெயலலிதா இருக்கும் போதே, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா தரப்புடன் ஓபிஎஸ்க்கு தொடர்பு இருந்ததாகவும்” தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு அப்போதைய எம்எல்ஏவாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், ஜெயலலிதாவிற்காக பதவி விலகத் தயங்கினார் என்று, ஓபிஎஸ் விமர்சித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்த தங்க தமிழ்ச்செல்வன், “ஓபிஎஸ்க்கு டிடிவி தினகரன், சசிகலா தரப்புடன் தற்போது வரை தொடர்புகள் இருக்கிறது” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
இதனிடையே, அதிமுகவிலிருந்து திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனின் இந்த விமர்சனம் மற்றும் குற்றச்சாட்டு அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.