தெலுங்கானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!
By Aruvi | Galatta | May 28, 2020, 09:19 am
தெலுங்கானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்புக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள பொடிச்சன்பள்ளி கிராமத்தில், கோவர்த்தன் என்பவர் தனது விவசாய நிலத்தில் 120 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு ஒன்றை தோண்டி உள்ளார். அவற்றை மூடாமல், அங்கிருந்து கோவர்த்தன் சென்றுவிட்டார்.
இதனிடையே, திறந்து கிடந்த அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மகன் 3 வயதான சாய் வர்தன், நேற்று மாலை அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தான்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், திடீரென ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். இதனை, அந்த ஆழ்துளை கிணற்றின் உரிமையாளரான கோவர்த்தனின் குடும்பத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்து, உடனடியாக சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன்படி, அந்த குறிப்பிட்ட ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு குழி தோண்டி, 25 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
அத்துடன், கிணற்றில் சிக்கி உள்ள சிறுவனுக்கு பிராணவாயு செலுத்தும் முயற்சியும் மற்றொரு பக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், 12 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர், இன்று அதிகாலையில் அந்த பகுதியில் சுமார் 17 அடி ஆழத்திற்குக் குழி தொண்டிய நிலையில், சிறுவனை மீட்டனர். ஆனால், சிறுவன் சாய் வர்தன், அப்போது உயிரிழந்து காணப்பட்டுள்ளான்.
உடனடியாக அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், பயம் மற்றும் கோடை காலத்தால் நிலத்தில் ஏற்பட்டிருக்கும் அதிக அளவிலான வெப்பம் காரணமாக, சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டமே சோகத்தில் மூழ்கி உள்ளது.