ஆன்லைன் மாதிரி தேர்வு, தொழில்நுட்ப கோளாறால் நிறுத்தம்- சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
By Nivetha | Galatta | Sep 19, 2020, 03:40 pm
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வருகிற 21-ந்தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. முதல் முறையாக இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது.
முதன்முறையாக ஆன்லைனில் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படவிருப்பதால், பல்கலைக்கழகம் சார்பில் பல கட்டுப்பாடுகளும், அறிவுறுத்தல்களும் விதிக்கப்பட்டும், வழங்கப்பட்டும் வருகிறது. அதன் ஒருபகுதியாக, மாணவர்கள் A4 தாளில் வீட்டில் இருந்து தேர்வு எழுதி அனுப்பி வைக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இருப்பினும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் இல்லை என கூறப்பட்டு வந்தது. ஆகவே ஆன்லைன் வழி தேர்வுகள் கிடையாது என்றும் மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற அனைத்து தனியார் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் இந்த புதிய முறையில் செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கான கேள்விகள் மாணவர்களுக்கு பல்கலைக்கழக இணையதளம் மூலமாகவும், வாட்ஸ் ஆப் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்றும் 90 நிமிடங்களுக்குள் மாணவர்கள் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. தேர்வுக்கான விடைகளை ஏ4 தாள்களில் 18 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, ஸ்பீட் போஸ்ட் மூலம் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவின் படிந்துரையின் பேரில், சென்னை பல்கலைக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
90 நிமிடம் நடைபெறும் இந்த தேர்வை ஆன்லைனில் எழுத இருக்கும் மாணவர்கள் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அறிந்து கொள்ள மாதிரி தேர்வு நடத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி, 18 (நேற்று), 19-ந்தேதிகளில் (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அறிவிப்பின்படி, நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை மாதிரி தேர்வு நடக்க இருந்தது. இதற்காக மாணவர்களுக்கு லாக்கின் ஐ.டி. குறித்த அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டது.
ஆனால் மாதிரி தேர்வு சரியான நேரத்தில் ஆரம்பிக்கவில்லை. மாலை 4 மணி வரை தேர்வு தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்படவில்லை. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாதிரி தேர்வை நடத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதிரி தேர்வு நிறுத்திவைக்கப்படுவதாகவும், எப்போது மீண்டும் நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்று(சனிக்கிழமை) தெரிவிக்கப்பட இருப்பதாகவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர்.
மாதிரி தேர்வுக்கே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், இறுதி செமஸ்டர் தேர்வை எழுதும்போது இதேபோன்று பிரச்சனை வந்தால் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படாதா என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்னர்தான், அண்ணா பல்கலைகழகத் தேர்வு துறை மாநிலம் முழுவதும் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இறுதி ஆண்டு பயிலும் எத்தனை மாணவர்களிடத்தில் செல்போன் வசதி உள்ளன, எவ்வளவு பேர் டேப் பயன்படுத்துகிறார்கள், கணினி வசதி உள்ள மாணவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்கப்பட்டது. அதன் முடிவில் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாத மாணவர்களே இல்லை என்ற விவரம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தெரியவந்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் எந்தவித சிக்கலுமின்றி ஆன்லைன் வழியில் தேர்வினை நடத்த இயலும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் தரப்பில் அனைத்தும் சரியாக இருக்கும்போதும், பல்கலைக்கழகம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது, மிகவும் வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.