“தமிழகத்தில் இரவு 8 முதல் காலை 6 வரை ஊரடங்கா?” தலைமைச் செயலர் தீவிர ஆலோசனை
By Aruvi | Galatta | Apr 16, 2021, 06:07 pm
தமிழகத்தில் இரவு 8 முதல் காலை 6 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது தொடர்பாகத் தலைமைச் செயலர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 வது அலை வீசிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டமாக இருக்கக்கூடிய திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.
அதே நேரத்தில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. எனினும், கொரோனாவின் தாக்கம் குறையாமல் இன்னும் வேகம் எடுத்து வருகிறது.
இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பொது மக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும், தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்பதை பொது மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, இரவு நேர ஊரடங்கு போடுவது குறித்து இப்போது என்னால் கூற முடியாது” என்றும், திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அத்துடன், “இரவு நேர ஊரடங்கு போடுவது, கொள்கை சார்ந்த முடிவு என்றும், அதிகமான தொற்று ஏற்படும் இடங்களில் நாங்கள் தனி கவனம் செலுத்தி வருகிறோம்” என்றும், அவர் விளக்கம் அளித்தார்.
அதே நேரத்தில், “அடுத்து வரும் 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றினால் கொரோனா தொற்று எண்ணிக்கை அப்படியே குறையும்” என்றும், அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
எனினும், தமிழ்நாட்டில் நாள்தோறும் பரவும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான தொடர்ந்து 3 வது நாளாக 8 ஆயிரத்தை நெருங்கி இருந்தது.
இதனால், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்து ஆலோசித்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக, தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், “கொரோனாவை வைரசை கட்டுப்படுத்த அதிக அளவில் பரிசோதனை நடத்துவது, கொரோனா தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது, அதிக அளவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை உருவாக்குவது, சிகிச்சை மையங்களை அதிகரிப்பது” உள்ளிட்ட விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அத்துடன், “முகக்கவசம், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும்” தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத்துறைச் செயலர், வருவாய்த்துறை ஆணையர், உள்துறை செயலர், காவல் உயர் அலுவலர்கள், மருத்துவ நிபுணர் குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து இன்று இரவுக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான நிலையில், “தமிழகத்தில் இரவு 8 முதல் காலை 6 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும்” தற்போது செய்திகள் பரவி வருகின்றன. இதற்கு, தமிழக அரசு இன்று வெளியீடும் செய்தி குறிப்பின் மூலமே பதில் சொல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.