தமிழகத்தில் அதிகரிக்கும் வேலையின்மை விகிதம்!
By Madhalai Aron | Galatta | Aug 04, 2020, 03:31 pm
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்தது. தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால இந்தியாவின் வேலையின்மை விகிதம் முன்பைவிட இரண்டு மடங்காக அதிகரித்தது.
சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (சி.எம்.ஐ.இ) என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 7.78 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம், ஏப்ரல் மாதம் 23.52 சதவீதமாக உயர்ந்தது.
சி.எம்.ஐ.இ புள்ளிவிவரப்படி ஏப்ரல் மாதம் பாண்டிச்சேரியின் வேலையின்மை சதவீதம் 75.8. தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 49.8. தேசிய சராசரியான 23.52 சதவீதத்தைவிட இது மிகவும் அதிகமாக இருந்தது. டெல்லியின் வேலையின்மை விகிதம் 16.7 சதவீதம். மகாராஷ்டிரத்தில் 20.9 சதவீதம். ஆந்திராவில் 20.5 சதவீதம், கர்நாடகத்தில் 29.8, கேரளாவில் 17, தெலங்கானாவில் 6.2, பிகாரில் 46.6 ஆக இருந்தது.
ஊரடங்கானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் வேலையின்மை விகிதம் தேசிய சராசரியை விகிதத்தை விட உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரலில் 43.8% ஆகவும், மே மாதத்தில் 33%ஆகவும், ஜூன் மாதத்தில் 13.1% ஆகவும் வேலைவாய்ப்பின்மை பதிவாகி இருந்தது. என்றாலும் தேசிய சராசரி வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7% ஆக இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஜூலை மாத விகிதம் 8.1% ஆக பதிவாகி உள்ளது. இந்த விகிதம் தொழில்கள் நிறைந்த மாநிலங்கள் ஆன மராட்டியத்தில் 4.4% ஆகவும் குஜராத்தில் 1.9% ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதற்கு கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது ஒரு முக்கிய காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். கிராமப்புறங்களில் பொது போக்குவரத்து தொடங்காமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தற்போது வட மாநில தொழிலாளர்களை கட்டுமான நிறுவனங்கள் விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதால் கட்டுமான நிறுவனங்கள் இழப்பை சந்திக்கின்றன. அதேபோல், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சில முக்கிய துறைகள் பழைய நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தொழில் முதலீட்டைப் பெற்றுள்ளது தமிழகம். இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் தமிழகத்தில், அரசு உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் முதலீட்டை ஈர்த்து, அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.