சாட்டையை சுழற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! “தவறு செய்யும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை” என எச்சரிக்கை..
By Aruvi | Galatta | May 11, 2021, 10:17 am
“தவறு செய்யும் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை” என்று, எச்சரிக்கையும், அறிவுரையும் வழங்கி, சாட்டையை சுழற்றத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்குப் பிறகு, மு.க. ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக அரியணை ஏறி இருக்கிறார். அவருடன் 33 அமைச்சர்களும் கடந்த 7 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி உள்ளது.
இப்படியான சூழ்நிலையில் தான், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டுள்ள மு.க.ஸ்டாலின் முன்பு பல கடுமையான சவால்கள் இருக்கின்றன.
அதில் மிக முக்கியமாக “கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலும் தடுப்பது மற்றும் தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுப்பது” ஆகியவையே, மு.க.ஸ்டாலின் முன்னால் இருக்கும் பெரும் சவாலாக இருக்கிறது.
இந்த நிலையில் தான், தமிழகத்தில் ஆட்சியமைத்த பிறகு நேற்றைய முன் தினம் தமிழகத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, கூட்டம் முறைப்படி நடந்துமுடிந்ததும் அதிகாரிகள் அனைவரும் வெளியே சென்ற பிறகு, அமைச்சர்களுடன், முதலமைச்சர் சிறிது நேரம் தனியாக உரையாடி சில அறிவுரைகளையும், சில எச்சரிக்கைகளையும் வழங்கினார். அது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
அந்த அறிவுரையில், “அமைச்சர்கள் அனைவரும், அவரவர் துறையில் பணி நியமனங்கள் மற்றும் பி.ஏ.க்கள் நியமனம் கூட மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கவேண்டும்” என்று, அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக, அவர் அமைச்சர்களிடம் பேசிய அறிவுரை வழங்கியது தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதன் படி, “கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், பொது மக்களிடம் நல்ல நிர்வாகத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்றும், அவரவர் தொகுதியில் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து நேரடியாகக் காவல் துறையிடம் அந்த அமைச்சரும் தொடர்புகொள்ளக் கூடாது” என்றும், கூறியிருக்கிறார்.
“காவல்துறை என் வசம் இருப்பதால், நீங்கள் எதாவது கூற விரும்பினால், நேரடியாக அந்த புகார்களை தன்னிடமே கூற வேண்டும் என்றும், அல்லது தனது முதலமைச்சர் அலுவலகத்தையோ தொடர்புகொள்ள வேண்டுமே தவிர நேரடியாகக் காவல் துறை விவகாரங்களில் தலையிடக் கூடாது” என்று, எச்சரிக்கையாகவே கூறியிருக்கிறார்.
அத்துடன், “பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்து உள்ளது என்று குறிப்பிட்டுப் பேசிய முதலமைச்சர், இந்த
வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி உங்கள் துறையில் நன்றாகச் செயல்படுங்கள்” என்றும், அறிவுறுத்தி உள்ளார்.
“முறைகேடுகள் நடைபெறும் பட்சத்தில் அந்த அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்” என்றும், மு.க.ஸ்டாலின் அப்போது மிகக் கடுமையான எச்சரிக்கையை வழங்கினார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்போது, “முதலமைச்சரின் அந்த எச்சரிக்கையான அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு நடப்பதாக சக அமைச்சர்களும் உத்தரவாதம் அளித்தனர்” என்றும், கூறப்படுகிறது.
இதனிடையே, திமுக ஆட்சியைக் கைப்பற்றியதும், கடந்த காலங்களைப் போல் மிகவும் அடாவடியான ஆட்சியை வழங்குவார்கள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருந்த நிலையில், சக அமைச்சர் பெருமக்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கி உள்ளது, தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.