புயல் எச்சரிக்கையால் 25 மாவட்டங்களில் உஷார் நிலை!
அரபிக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் மையம் கொண்டுள்ளதால், 25 மாவட்டங்கள் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கன மழை காரணமாக, நேற்று கிட்டத் தட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 22 மாவட்டங்களில் தொடர்ந்து 2 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று முதல் காலை வரை பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதனைத்தொடர்ந்து, 2 வது நாளாக இன்றும் பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும், மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் ஆடலூர், பன்றிமலை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாகப் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்தார்.
அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் மற்றும் உதகை - குன்னூர் மலை ரயில் சேவை இன்று முதல், நவம்பர் 2 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு ரத்து செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், அரபிக்கடலில் ஒரே நேரத்தில் 2 புயல்கள் மையம் கொண்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 மாவட்டங்களில் உஷார் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.